இந்தியாவில் இருந்து மீண்டும் பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டம்

பதிவு செய்த நாள் : 28 பிப்ரவரி 2021 19:27

இஸ்லாமாபாத்,

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 28 ம் தேதி வெளியான ஒரு ஊடக அறிக்கையின்படி, இரு நாடுகள் இடையேயான புதிய போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இருதரப்பு வர்த்தக உறவுகளை படிப்படியாக மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதிக்கலாம்.

வர்த்தக அமைச்சகத்தின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வர்த்தகத்துக்கான பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து பருத்தி மற்றும் நூலை இறக்குமதி செய்வது குறித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பருத்தி பற்றாக்குறை பிரச்சினை ஏற்கனவே பிரதமர் இம்ரான் கானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, அவர் வர்த்தக அமைச்சகத்தையும் தனது அதிகாரித்தில் வைத்திருக்கிறார். கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டவுடன், முறையான உத்தரவு அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டில் இது குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.ஆனால் பிரதமரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை அனுமதிக்க பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறதா என்ற எகஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிகையாளரின் கேள்விக்கு "இந்த கட்டத்தில் என்னால் ஆம் அல்லது இல்லை என்று சொல்ல முடியாது. வரும் திங்களன்று இந்த விவகாரத்தில் பதிலளிப்பதற்கு இது ஒரு சிறந்த நிலையில் இருக்கும்" என்று அப்துல் ரசாக் தாவூத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பாகிஸ்தானில் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், நீடித்த உணவுப் பொருட்களை உறுதிப்படுத்தவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

பருத்தி மற்றும் நூல் பற்றாக்குறை காரணமாக, அமெரிக்கா, பிரேசில் மற்றும் உஸ்பெகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் வணிகர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது மிகவும் மலிவானதாக இருக்கும், மேலும் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் பருத்தி பாகிஸ்தானை சென்றடையும்.

மற்ற நாடுகளிலிருந்து நூல் இறக்குமதி செய்வது விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானை அடைய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் இந்த பொருட்களில் ஈடுபடும் வணிகர்களை தெரிவித்துள்ளனர்.

பருத்தி இறக்குமதிக்கு எதிர்ப்பு

இந்தியாவில் இருந்து பருத்தி மற்றும் நூல் இறக்குமதியை அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து பாகிஸ்தான் டெக்ஸ்டைல் மில்ஸ் அசோசியேஷன் (ஆப்ட்மா) பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியாவில் இருந்து நூல் இறக்குமதி செய்வது பாகிஸ்தானில் பருத்தி விலையை நேரடியாக பாதிக்கும் என்று தாவூத்திடம் வலியுறுத்தியுள்ளது.

"பருத்தி விதைப்பு பருவம் தற்போது பாகிஸ்தானில் தொடங்கி வருகிறது. இந்த சமயத்தில் இந்தியாவில் இருந்து நூல் இறக்குமதி செய்வதால் பருத்தி விலை சுமார் 10-15 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயிகள் பருத்தி விதைப்பதை ஊக்கப்படுத்தாது என்று ஆப்ட்மா (Aptma) தெரிவித்துள்ளது.