நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் : இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 25 பிப்ரவரி 2021 20:34

லண்டன்

லண்டன் சிறையில் இருக்கும் தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு நீதிபதி சாமுவேல் கூசி, இன்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி (வயது 48) மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து நிர்வ மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

இந்த கடன் மோசடி வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நிரவ் மோடி, லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் லண்டன் போலீசார் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி நிரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் நிரவ் மோடியை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில், நிரவ் மோடி பலமுறை கோரியும் இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்

நிரவ் மோடிக்கு எதிராக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி, வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அதிரடியாக அறிவித்தார்.

நிரவ் மோடியை மீது பணமோசடி தொடர்பான வழக்குகள் நிறுவப்பட்டதற்கான ஆதாரங்களில் நான் திருப்தி அடைகிறேன். நீரவ் மோடி சாட்சியங்களை அழிக்கவும் சாட்சிகளை மிரட்டவும் சதி செய்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் இந்திய சிறைச்சாலை நிலை சரியில்லை போன்ற வாதங்களை தள்ளுபடி செய்கிறேன். மும்பை ஆர்தர் சாலை சிறையில் போதுமான மருத்துவ வசதி இருப்பதால் நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இல்லை.

நிரவ் மோடிக்கு மும்பை ஆர்தர் சாலை சிறையில் போதுமான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல பராமரிப்பு வழங்கப்படும். எனவே, லண்டனில் உள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறேன் என்று சாமுவேல் கூசி அதிரடியாக தீர்ப்பளித்தார்.

வழக்கு விசாரணையின்போது, வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் இருந்து நிரவ் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் தனது தீர்ப்பின் சில பகுதிகளைப் படித்த நீதிபதி தனது தீர்ப்பை இங்கிலாந்தின் மாநில செயலாளரான பிரிதி படேலுக்கு அனுப்புவதாக அறிவித்தார்.

இந்தியா-இங்கிலாந்து ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் நிரவ் மோடியை ஒப்படைக்க உத்தரவிட இங்கிலாந்து அமைச்சரே அதிகாரம் பெற்றவர்.அந்த முடிவை எடுக்க இரண்டு மாதங்கள் உள்ளன.

அமைச்சர் முடிவு எதுவாக இருந்தாலும், நீரவ் மோடி - உயர்நீதிமன்றத்தை அணுகவும், உள்துறை செயலாளரின் தீர்ப்பின் பின்னர் மேல்முறையீடு செய்யவும் 14 நாட்கள் வரை அவகாசம் உள்ளது.