1.35 கோடி ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க இலங்கை அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் : 24 பிப்ரவரி 2021 16:05

கொழும்பு,

இந்தியா பரிசளித்த 5 லட்சம் டோஸ் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு கூடுதலாக 1.35 கோடி  டோஸ்களை வாங்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.  

 

மேலும் இலங்கையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிக்கு சீன தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 80,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக இந்தியாவிடம் இருந்து 1.35 கோடி தடுப்பு மருந்து டோஸ்களை வாங்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன மற்றும் ரஷ்யா தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் இன்னும் தயாராக இல்லாததால், இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் மட்டுமே இலங்கை வர வாய்ப்புள்ளது என்று தோட்ட அமைச்சராக இருக்கும் ரமேஷ் பதிரானா தெரிவித்தார்.

சீன அரசு தனது தடுப்பூசி மீதான மூன்றாம் கட்ட சோதனைகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் ரமேஷ் பதிரானா கூறினார்.

முதல் சுற்று தடுப்பூசி போடும் பணிக்கு இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 1 கோடி டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்துகளை 5.25 கோடி மில்லியன் டாலர் செலவில் வாங்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 35 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை நேரடியாக இலக்கை அரசின் கோவேக்ஸ் (Covax) திட்டத்தின் கீழ் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தில் இருந்து நேரடியாக வாங்கப்படும் என்று இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு 50,000 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷே நன்றி தெரிவித்தார்.

கடந்த மாதம், இலங்கை, பூட்டான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய ஏழு நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை மானிய உதவியின் கீழ் அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .