அமெரிக்க நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய மீன்பிடி ஒப்பந்தம் ரத்து : கேரள அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 13:19

திருவனந்தபுரம்,

அமெரிக்காவை சேர்ந்த ஈ.எம்.சி.சி இன்டர்நேஷனல் நிறுவனத்துடனான கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து கழகத்தின் (கே.எஸ்.ஐ.என்.சி) சர்ச்சைக்குரிய ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக திங்கள்கிழமை கேரள அரசு அறிவித்துள்ளது.  

கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் என்.பிரசாந்த் மற்றும் ஈ.எம்.சி.சி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷிஜு வர்கீஸ் இருவரும் சமீபத்தில் 400 ஆழ்கடல் மீன்பிடி இழுவை அமைப்பது. புதிய துறைமுகங்களை உருவாக்க மற்றும் துறைமுக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூ. 2,950 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால் இந்த ஒப்பந்தம் பாரம்பரிய மீனவர்களுக்கு மட்டுமே ஆழ்கடல் மீன்பிடி இழுவைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது இயக்கவோ அனுமதிக்கும் இடது ஜனநாயக முன்னணியின் மீறுவதாக உள்ளதை கேரள அரசு கண்டறிந்தது.

எனவே இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடும்போது கே.எஸ்.ஐ.என்.சி (KSINC) முக்கியமான விதிமுறையை தவறவிட்டதாக கேரள அரசு உணர்ந்தது.

அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தம் எப்படி, எந்த சூழ்நிலையில் கையெழுத்தானது என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன் பேரில் கேரள அரசின் உள்துறை செயலாளர் டி.கே.ஜோஸ் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

இந்த ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தந்த்திற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிக்குட்டிக்கும் முன்பே தெரியும். இந்த ஒப்பந்தத்தில் ரூ.5000 கோடிக்கு முறைகேடும் நடந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ‘‘ கே.எஸ்.ஐ.என்.சி அதிகாரிகளை குற்றம் சாட்டுவது அரசியல் நிர்வாகத்திற்கு உதவாது. தனியார் வணிகத்தின் பலிபீடத்தில் பாரம்பரிய மீனவர்களை பலியிடும் குற்றத்தை செய்ததால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து கேரள அரசால் வெளிவர முடியவில்லை. அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான நோக்கம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது’’ என சென்னிதலா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி., டி.என்.பிரதாபன் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கொச்சியில் உள்ள கே.எஸ்.ஐ.என்.சி அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள அரசு மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கேரள அரசு இந்த சர்ச்சைக்குரிய மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக நேற்று அறிவித்தது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ‘‘ஒருபோதும் கேரள அரசு அதன் மீன்பிடி கொள்கைக்கு எதிராக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தத்தை வழங்காது’’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனம் எதிர்ப்பு

சர்ச்சைக்குரிய மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் கேரள அரசின் முடிவுக்கு அமெரிக்க நிறுவனமான ஈ.எம்.சி.சி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஷிஜு வர்கீஸ் “எந்த அடிப்படையில் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது? நாங்கள் மாநிலத்தின் மீன் இருப்பு கொள்ளையடிக்க வரும் நிறுவனம் அல்ல. இந்த திட்டம் மாநிலத்தின் மீன்வளக் கொள்கைக்கு எதிரானது என மீன்வளத்துறை அமைச்சர் ஏன் எங்களிடம் முன்பே சொல்லவில்லை? "என்று அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் கேள்வி எழுப்பியுள்ளார்.