சென்னை:
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிக்கிறோம், என சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக, கூட்டணி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவை தொடங்கிய உடன் தனது கருத்தை தெரிவிக்க துரைமுருகனை சபாநாயகர் அனுமதிக்காததால் சர்ச்சை எழுந்தது.
துரைமுருகன் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைக்கப்பட்டதால் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது.
துரைமுருகன் பேசுவது அவைகுறிப்பில் பதிவாகாது என்று சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்.சை அழைத்து விட்டதால் துரைமுருகன் பேச சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.
திமுக வெளிநடப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இடைக்கால பட்ஜெட் உரையையும் திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
திமுக-வை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
துரைமுருகன் பேட்டி
சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேட்டியளித்தார். தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரைபுறக்கணிப்பதாக அறிவித்தார்.
திமுக ஆட்சி முடியும்போது ரூபாய் 1 கோடி கடன் தான் இருந்தது.
அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியது தான் அதிமுக அரசின் சாதனை என குறிப்பிட்டார்.
தேர்தல் நேரத்தில் சுயநலத்திற்காக அதிமுக அரசு பணம் கொடுக்கிறது.
தமிழக வளர்ச்சியை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டனர். தமிழகத்தின் நிதி நிலைமை திமுக ஆட்சிக்கு வந்ததும் சரி செய்யப்படும்.
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறும்..
ஸ்டாலின் முதலமைச்சராக வந்த உடன்தான் மீண்டும் சபைக்கு திரும்புவோம் .
என துரைமுருகன் பேட்டியில் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் புறக்கணிப்பதாக திமுதலைவர் ஸ்டாலினும் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.