மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றம் ஏற்பட பாஜக ஆட்சி அமைய வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 21:15

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் ஆட்சியில் இருக்கும் வரை வளர்ச்சிக்கு இடமில்லை. மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றங்கள் வர வேண்டும் என்றால் இங்கு பாஜக ஆட்சி அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

திங்கள்கிழமை பிற்பகல் மேற்குவங்காளம் ஹூக்லியில் நடந்த ஒரு பொது பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசு திட்டங்களின் நன்மைகள் மேற்கு வங்கத்தில் உள்ள ஏழைகளுக்கு எட்டவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவர் பேசியதன் விவரம் :

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய பண உதவிகள் நேரடியாக விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகின்றன.

ஆனால் மேற்குவங்க அரசின் நலதிட்டங்கள் மூலம் மக்களுக்கு வரவேண்டிய பணம் நடுவில் உள்ள சிலரின் அனுமதியில்லாமல் ஏழைகளுக்கு சென்று சேராது. இதனால்தான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். ஏழை குடும்பங்கள் மேலும் ஏழ்மைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை இல்லை. மத்திய அரசு அம்பன் புயல் நிவாரண நிதியாக ரூ.1700 கோடியை மேற்குவங்கத்திற்கு அளித்தது. ஆனால் அதில் வெறும் ரூ.609 கோடி மட்டுமே மக்களுக்காக செலவிடப்பட்டது. மீது ரூ.1,100 கோடியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எடுத்துகொண்டது.

மேற்குவங்கத்தில் பண கலாச்சாரம், கிரிமினல் விதிகள் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் நடைமுறை ஆகியவை நீடிக்கும் வரை இங்கு வளர்ச்சி சாத்தியமில்லை.

தாமரை மலர வேண்டும்

அரசியல் மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் உண்மையான மாற்றத்திற்காகவும் மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி உருவாக வேண்டும். இளைஞர்கள் விரும்பும் மாற்றங்கள் வர மேற்குவங்கத்தில் தாமரை மலர வேண்டும். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

பாஜக ஆட்சி அமைந்தால் தொழில்துறை கொள்கைகளில் வளர்ச்சிக்கான மாற்றங்கள் கொண்டு வரப்படும். வேகமான வளர்ச்சிக்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பகிம் சந்திர சட்டர்ஜி 5 வருடங்கள் வாழ்ந்த வந்தே மாதரம் பவன் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. இந்த பவனில் தான் அவர் வந்தே மாதரம் பாடலை எழுதினார். அந்த பாடல் நம் நாட்டு சுதந்திர போராட்டத்திற்கு புதிய ஊக்கத்தை அளித்தது.

அப்படிப்பட்ட வந்தே மாதரம் பவனை சரியாக பராமரிக்காமல் இருப்பது மேற்குவங்கத்தின் பெருமைக்கு செய்த அநீதி. இதற்கு மேற்குவங்கத்தின் வாக்கு வங்கி அரசியல் தான் காரணம். வாக்கு வங்கி அரசியலுக்காக மேற்குவங்கத்தின் கலாச்சாரத்தை அவமானப்படுத்தியவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

வங்காளத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக செயல்படும். நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் தொழில்முனைவு ஆகியவை மதிக்கப்படும்.

அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கக்கூடிய மேற்குவங்கம் உருவாக்கப்படும். ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் ஆட்சி நடக்காது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மொத்தம் 294 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.