ஆசியாவில் மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா- முதலமைச்சர் பழனிசாமி திறந்தார்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 17:21

சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசலில் சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்‌ கல்லூரியை முதலமைச்சர்‌ எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 3 கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகளையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,000 கோடி செலவில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி பூங்கா மற்றும் கல்லூரியில் மொத்தம் 3 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

முதல் பிரிவில் கால்நடைப்‌ பண்ணை வளாகத்தில்‌, நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

2ம்‌ பிரிவில்‌, பால்‌, இறைச்சி, மீன்‌ மற்றும்‌ முட்டை உள்ளிட்டவை பதப்படுத்தும் கூடமும், அவற்றில்‌ இருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயார்‌ செய்யவும்‌, சந்தைப்படுத்தவும்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.

3வது பிரிவில், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வசதியாகவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மரபு திறன்‌ மிக்க நாட்டின மற்றும்‌ கலப்பின காளைகளின்‌ புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும்‌ இதே வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ளது.

1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும்‌ கல்லூரியை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

118 கோடி செலவில் தமிழகத்தின்‌ 5ஆவது கால்நடை மருத்துவக்‌ கல்லூரியையும்‌ முதலமைச்சர்‌ பழனிசாமி‌ தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 3 கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகளையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

தலைவாசல் தனி தாலுகா

இதுவரை தலைவாசல் பகுதி, சேலம் - ஆத்தூர் தாலுகாவில் இருந்தது. தலைவாசல் தனி தாலுகாவாக செயல்படவில்லை.

தற்போது தலைவாசல் தனி தாலுகா உருவாக்குவதற்கான கல்வெட்டையும் முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முதலமைச்சர் பழனிசாமி உரை

தலைவாசல் கூட்டுரோட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் பழனிசாமி ஆற்றிய உரை:

     அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டட திறப்பு விழா, தலைவாசல் புதிய வருவாய் வட்ட திறப்பு விழா, எடப்பாடி நகரத்தில் அறநிலையத் துறையின் சார்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருமண மண்டபம் திறப்பு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற இந்த எழுச்சியான, சிறப்பான நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்தபோதே கால்நடை வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். விவசாயிகளின் உபதொழில் கால்நடை வளர்ப்பு. விவசாயிகள் பெரும்பாலும் கால்நடைகள் வளர்க்கும் தொழிலில் தொன்றுதொட்டு ஈடுபட்டு வருகிறார்கள். கால்நடைச் செல்வங்களை சிறப்பாக பேணிக் காக்க வேண்டுமென்பதற்காக அம்மாவின் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி உள்ளது.  ஏறத்தாழ 1,600 ஏக்கர் நிலத்தில் ஏறத்தாழ 1,023 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

  நானே இந்தக் கால்நடை பூங்கா அமைக்கப்படுமென்று அறிவித்து, நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினேன். ஒரே ஆண்டு காலத்தில் இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டு, இன்றைக்கு ஒரு பகுதி திறக்கப்பட்டுள்ளது, அதையும் நானே நேரடியாக வந்து திறந்து வைத்துள்ளேன்.

     நான், சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் இதனை திறந்து வைக்கலாமென்று தெரிவித்ததற்கு கால்நடைத் துறை அமைச்சர் அவர்கள், நீங்களும் ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி, எனவே, விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நேரடியாக வந்து திறந்து வைத்தால் அது விவசாயிகளுக்கு சிறப்பு சேர்க்கின்ற விதமாக இருக்குமென்றும் இந்தக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருமென்றும் தெரிவித்தார்.

இன்றைக்கு தலைவாசலில் ஆரம்பிக்கப்படுகிற கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மட்டுமல்ல, தேனி மற்றும் உடுமலைப் பேட்டையிலும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இங்கு பயில்கின்ற மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை, நீங்கள் நேரடியாக வந்து, அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையை ஏற்று, இங்கே வந்து மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெறுகின்ற மாணவர்களுக்கு நாங்கள் சேர்க்கை ஆணைகளை அளித்தோம். இந்த மூன்று கல்லூரிகளும் முதன்முதலாக தொடங்கப்படுகிறது. அதுவும், தலைவாசல் கூட்டு ரோட்டில் பிரம்மாண்டமான கல்லூரியில் படிக்கின்ற வாய்ப்பை இங்கே இருக்கின்ற மாணவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து, விவசாய பெருங்குடி மக்களுக்கு அர்ப்பணிப்போடு பேருதவியாக இருந்து நன்மை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது, அமெரிக்காவிலுள்ள பஃபல்லோ பண்ணைக்கு சென்றேன். அப்போது  கால்நடைத் துறை அமைச்சர் அவர்களும் , துறை செயலாளரும் வந்தார்கள். அங்கே இருக்கின்ற பசுக்கள் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 65 லிட்டர் பால் கொடுக்கின்றது. நம்முடைய மாநிலத்தில் ஏன் இந்த மாதிரி பசுக்களை உருவாக்கி, நம் விவசாயிகளுக்கு தரக்கூடாது  என்று நான் துறை செயலாளரிடம் கூறியபோது, அவர் சொன்னார், நிச்சயமாக நம்முடைய பகுதியிலும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக இதை உருவாக்கி விவசாயிகளுக்குத் தந்து 65 லிட்டர் பால் கொடுக்காவிட்டாலும், ஏறத்தாழ 35 லிட்டர் முதல் 45 லிட்டர் பால் தரக்கூடிய கலப்பினப் பசுக்களை நாம் உருவாக்கி விவசாயிகளுக்குத் தரலாம், அதனால் விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெறுவார்கள். இப்போதுள்ள கலப்பினப் பசுக்கள் ஏறத்தாழ 15 லிட்டர் பால்தான் கொடுக்கும். ஆனால் நம்முடைய ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கலப்பினப் பசுக்களை  உருவாக்கி விவசாயிகளுக்குத் தருகின்றபோது அது இரட்டிப்பு அளவிற்கு  பால் கொடுக்கும், அதனால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக பெருகும் என்று தெரிவித்தார். அதேபோல, அந்த கலப்பின பசுக்களை உருவாக்குவதற்காக கருமந்துறையில் ரூபாய் 100 கோடி  ரூபாயில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவிருக்கின்றது.

அதுமட்டுமல்ல, விவசாயிகள் என்ன நினைக்கின்றார்களோ, அவர்களுக்கு     கிடாரி கன்று வேண்டுமென்றால் கிடாரி கன்று, காளை கன்று வேண்டுமென்றால் காளை கன்று என விந்தணுவை பிரித்து, அந்த பசு சினை ஆகின்றபோது, பிரிக்கப்பட்ட விந்தணு மூலமாக காளை கன்று வேண்டுமென்றால், அந்த பசு காளை கன்றை ஈன்று தரும்,  கிடாரி கன்று வேண்டுமென்றால்,  அந்த பசு கிடாரி கன்றை ஈன்று தரும். அந்த நவீன விஞ்ஞான முறைப்படி நம் விவசாயிகள் நினைக்கின்ற வகையில்  ஊட்டியில் ஏறத்தாழ ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் விந்தணு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம்.  சிலர் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தால் இது தடைப்பட்டது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெற்றிருக்கின்றோம். விரைவில் அந்தத் திட்டமும் தொடங்கவிருக்கின்றது. ஆகவே, இந்த அரசு விவசாயிகளுடைய அரசு, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க எங்களுடைய அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டுமென்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், ஏழை, எளிய மக்களுக்கு கறவை பசுக்கள், வெள்ளாடுகளை விலையில்லாமல் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு நான் முதலமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விலையில்லா கோழிகளையும் கொடுத்தோம். ஆகவே, கிராமப்புற சூழ்நிலைக்கேற்றவாறு, அவர்களுடைய பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டங்களையெல்லாம் கொண்டுவந்து நிறைவேற்றி வெற்றிகரமாக அந்த கிராமப்புற ஏழை மக்களும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.

நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், திருப்பூரில் பேசுகின்றபோது, திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் புதிய, புதிய திட்டங்களை அறிவிக்கிறார், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும்  பணியை மட்டும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், எந்தத் திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை என்று சொல்கிறார். உதாரணத்திற்கு இந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  நானே இந்த கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தேன், அறிவித்ததோடு இதற்குத் தேவையான நிதி ஆதாரத்தையும் நாங்கள் உருவாக்கினோம், அதற்குத் தேவையான இடத்தையும் தேர்வு செய்தோம். இடத்தை தேர்வு செய்தது மட்டுமல்ல, இந்தப் பகுதியில் நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினேன். இப்போது நானே நேரடியாக வந்து அந்த முடிவுற்ற கட்டடத்தை திறந்து வைக்கிறேன். திரு.ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை நிறைவேற்றி மக்களுக்கு நன்மை செய்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம் என்பதை நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு சாலைகளை உருவாக்கித் தந்திருக்கிறோம், பல்வேறு குடிநீர் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.  இங்கே கூட நிலையான பாதுகாக்கப்பட்ட நீர் அளிக்க வேண்டுமென்பதற்காக பூலாம்பட்டி அருகிலிருந்து காவேரி ஆற்றில் தண்ணீர் எடுத்து ஏறத்தாழ 700 கோடி ரூபாயில் 10 எம்.எல்.டி தண்ணீரை கொண்டுவந்து இந்த கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொடுத்திருக்கிறோம். அப்படியென்றால், இந்த கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்திற்கு  பார்த்துப் பார்த்து திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றோம். நமது மாண்புமிகு கால்நடைத் துறை அமைச்சர் அவர்களும், துறை செயலாளரும் பலமுறை என்னை நேரில் சந்தித்து, ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவில் அமைக்கப்படுகின்ற கால்நடைப் பூங்கா மற்றும் கல்லூரி கட்டடம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, அழகிய வடிவத்துடன் அந்த கட்டடம் அமைய இருக்கின்றது என்பதைத் தெரிவித்தார்கள்.  இந்த கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி மையத்தில் படிக்கின்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், அவ்வளவு அற்புதமான கல்லூரியை உருவாக்கித் தருவோமென்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய அரசாங்கம் வேளாண் பெருமக்களுக்கு நன்மை செய்கின்ற அரசாங்கம், வேளாண் பெருமக்களுடைய துன்பங்கள், துயரங்களை துடைக்கின்ற அரசாங்கமாக எங்களது அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்து, இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும், அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்றைய உரையில் தெரிவித்துள்ளார்.