தைவான் எல்லைக்குள் ஊடுறுவிய சீனா போர் விமானங்கள் : தைவான் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2021 20:54

தைபே,

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தைவான் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்கு அருகே சனிக்கிழமை சுமார் ஒரு டஜன் சீன போர் விமானங்கள் பயிற்சிகளை மேற்கொண்டன. அதைத் தொடர்ந்து  தைவான் தன் போர்விமானங்களை அனுப்பி சீன விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் தங்களுடைய பிராந்தியம் என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்பட்டால் ஆக்கிரமிப்பு மூலம்தைவானை கைப்பற்றுவோம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக தைவானுக்கு சொந்தமான கடல் மற்றும் வான்வழி பகுதிகளில் சீன போர்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள் அவ்வபோது ஊடுறுவி வருகின்றன. இதற்கு எதிராக தைவான் அரசும் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீன அச்சுறுத்தலை சமாளிக்க தைவான் அரசு அமெரிக்காவின் உதவியுடன் தன் ராணுவ பலத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்பது சீன விமானப்படை விமானங்கள் வெள்ளிக்கிழமை தைவானின் பிரதாஸ் தீவுகளுக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டன.

அதைத் தொடர்ந்து தைவான் அரசு சனிக்கிழமையன்று தங்கள் எல்லையில் 11 போர் விமானங்கள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன கடற்படையும் தைவான் பகுதியில் ஊடுறுவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தைவானின் விமானப்படை சீன விமானங்களை தங்கள் எல்லையை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தது. மேலும் சீன ராணுவத்தின் செயல்பாட்டை கண்காணிக்க ஏவுகணை அமைப்புகளை நிலை நிறுத்தப்பட்டன என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு எண்டெஹ தகவல்களும் வெளிவரவில்லை. இந்த விவகாரம் குறித்து சீன அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ நவீனமயமாக்கல் மற்றும் உளவுத்துறை செயல்முறைகளை அதிகரிக்க உதவும் வகையில், அமெரிக்க பயிற்சி பெற்ற புதிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிப்பது உட்பட மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் மறுசீரமைப்பு குறித்து தைவான் வெள்ளிக்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது .