ரஷ்யாவில் முதல்முறையாக மனிதர்களுக்கு பரவிய பறவை காய்ச்சல் நோய்

பதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2021 20:27

மாஸ்கோ,

ரஷ்யாவில் முதல்முறையாக பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல லட்சம் பேரை பலிவாங்கியது.

பெரும்பாலான நாடுகளில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த புதிய பிரச்சினையாக பறவை காய்ச்சல் உருவெடுத்துள்ளது.

பறவை காய்ச்சல் முதன் முறையாக மனிதர்களுக்கு பரவி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் பணியாற்றும் 7 தொழிலாளர்களுக்கு ‘எச்5 என்8’ (H5N8) என்ற புதிய வகை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளதை உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரஷ்யாவின் சுகாதார கண்காணிப்பு குழு தலைவர் அன்னை போபோவா கூறுகையில் ‘‘கோழிப்பண்ணையில் பணியாற்றிய 7 தொழிலாளர்களிடம் இருந்துது சேகரிக்கப்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்தது.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் எந்த கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை. உலகில் முதன்முறையாக பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘‘இந்த வைரஸ் மேலும் மரபணு மாற்றம் அடைய முடியுமா என்பதை காலம்தான் சொல்லும். மனிதரிடம் இருந்து மனிதனுக்கு பரவும் திறனை இன்னும் இந்த வைரஸ் பெறாதபோது இந்த கண்டுபிடிப்பு அனைவருக்கும், உலகம் முழுவதுக்கும் அதனை தடுக்க தயாராவதற்கும், போதுமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் நேரத்தை தருகிறது’’ என அன்னை போபோவா தெரிவித்துள்ளார்.

பறவை காய்ச்சல் வைரஸ்களில் வெவ்வேறு வகைகள் உள்ளன. இதில் மிகவும் தொற்று நோயான ‘எச்5 என்8’ பறவைகளுக்கு ஆபத்தானது. இதற்கு முன்பு இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரஷ்யாவில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.