ராஜ தர்மத்தை கடைபிடியுங்கள்; பெட்ரோல் விலையை குறையுங்கள்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

பதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2021 19:59

புதுடெல்லி,

மத்திய அரசு, ராஜ தர்மத்தை கடைபிடித்து பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ‘ ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இருந்த கச்சா எண்ணெய் விலையில் பாதி தான் இப்போது உள்ளது. பெட்ரோல் விலையை தொடர்ந்து அரசு உயர்த்துவது லாப நோக்கம் கொண்ட வெட்ககேடான நடவடிக்கை.’ என்று கூறி உள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான அரசின் கலால் வரி விதிப்பு, தவறான பொருளாதார மேலாண்மையை மூடி மறைப்பதற்காக பொது மக்களிடம் செய்யப்படும் வழிப்பறி என சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தலை குப்புற சரிகிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தி சரிந்துள்ளது எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

பொருளாதார மந்தநிலை, வேலை இழப்பு, ஊதிய குறைப்பு, விலை உயர்வு ஆகியவற்றால் மாத ஊதியதாரர்கள், விவசாயிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

ராஜ தர்மத்தை கடைபிடித்து சுங்க வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை நீங்கள் குறைக்க வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில்  கேட்டுக் கொண்டு உளளார்.