ஐநா மனித உரிமை ஆணையத்தில் விசாரணை : இந்தியாவிடம் ஆதரவு கோரிய இலங்கை

பதிவு செய்த நாள் : 20 பிப்ரவரி 2021 19:21

கொழும்பு,

இலங்கையில் தனிநாடு கேட்டு போராடிய விடுதலை புலிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அடுத்த வாரம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் ஆதரவு கோரியுள்ளது.

இந்த கூட்டம் ஜெனீவாவில் இருந்து காணொலி முறையில் நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின்  நிரந்தரச் செயலாளா் ஜெயநாத் கொலம்பாகே  விடுத்த அறிக்கையில்  ‘‘மனித உரிமைக மீறல் குற்றச்சாட்டு விஷயத்தில் இலங்கை முதன்முதலில் ஆதரவு கோரிய நாடு இந்தியா.ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் .நமது நம்பிக்கையையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்’’ என்று ஜெயநாத்  தெரிவித்துள்ளார்.

உலகின் சில சக்தி வாய்ந்த நாடுகள் இலங்கை விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றன. இலங்கையில் இப்போது அமைதி திரும்பி, சிறப்பான ஜனநாயக ஆட்சி நடைமுறையில் உள்ளது. ஆனாலும், இன்னும் தொடா்ந்து போர்க்கால நிகழ்வுகள் தொடா்பாக அந்த நாடுகள் பேசி வருகின்றன. ரஷ்யா மற்றும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும்  என்றும் ஜெயநாத் கூறியுள்ளார்.

பிரிட்டன், ஜெர்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா, மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.