ஜீரோ வட்டி கடன் சாத்தியமா?

பதிவு செய்த நாள் : 19 பிப்ரவரி 2021

  இப்போது வீட்டு உபயோகப் பொருட்களை முழு பணத்தையும் கொடுத்து வாங்குவது அரிது. அதற்கு மாற்றாக ஜீரோ வட்டி கடனில் அப் பொருட்களை வாங்கி நுகர்வதுதான் அதிகம். உண்மையில் ஜீரோ வட்டியில் கடன் அளிக்க முடியுமா என பொருளாதார நிபுணர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது.

"தற்போது நுகர்வோர் சாதனங்களை கடனில் வாங்கி உபயோகிப்பவர்கள் தான் அதிகம். மின்னணு சாதனங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றன. அப்படியிருந்தும் வாங்கி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டுதான் இருக்கிறது. அவை விலை அதிகமாக இருப்பதால் கடனில் வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகிறார்கள். இவற்றிற்கு உதவி புரிய வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தயராக நிற்கின்றன. நுகர்வோர் கலாசாரம் பெருகிக் கொண்டு இருப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை. தேவைபடுவோர் கடனில் வாங்கிக்கொள்வது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நாம் அதில் தலையிடுவது சரியாக இருக்காது.

இருக்கிற கடன்களிலேயே விரைவாக வழங்கும் கடன் என்றால் அது நுகர்வு சாதனக் கடன்தான். இந்த நுகர்வு சாதனக் கடனில்தான் ஜீரோ வட்டி என்ற கடன் திட்டம் மிகவும் பிரபலமானது. ஜீரோ வட்டி என்பது உண்மையில் ஜீரோ வட்டி கிடையாது. நீங்கள் வாங்கும் சாதனங்களுக்கு வழங்கும் தள்ளுபடியை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனில் சேர்க்கப்பட்டு நுகர்வோருக்கு ஜீரோ வட்டியில் கடன் அளிப்பது போன்று பாசாங்கம் செய்யப்படுகிறது.

நீங்கள் ஜீரோ வட்டி கடன் திட்டத்தில் நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர்கள் தள்ளுபடி எதுவும் செய்யமாட்டார்கள். மேலும் இக்கடனை பரிசீலிக்க கட்டணம் ஒன்றையும் வசூலிப்பார்கள். இது உங்களிடமிருந்து மறைமுகமாக வசூலிக்கப்படும் வட்டியாகும். இதை இப்படி சொன்னாலதான் உங்களுக்கு புரியும்.

நீங்கள் வாங்க ஆசைப் பட்ட செல்போனின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்று வைத்துகொள்ளுங்கள். முழு பணத்தை செலுத்தி செல்போன் வாங்குவதாக இருந்தால் கடைக்காரர் அதை 15 சதவீகிதம் தள்ளுபடி செய்து 12 ஆயிரத்து 750 ரூபாய்க்கு கொடுப்பார். உங்களுக்கு தள்ளுபடியாக 2 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். அதுவே கடனில் வாங்கும் போது மாதம் 15 சதவிகிதம் வட்டி என்ற கணக்கில் மூன்று மாத தவணையில் கொடுக்கும் போது வட்டியாக 2 ஆயிரத்து 250 மறைமுகமாக வசூலிப்பர். 

இதுவே கடன் அளிக்கும் நிறுவனத்துக்கு அளிக்கப்படுவதால் செல்போனை பணத்தை கொடுத்து வாங்கும் போது உங்களுக்கு வழங்கப்படும் விலையான 12 ஆயிரத்து 750யோடு கூட்டும் போது 15 ஆயிரம் ரூபாய் வந்துவிடும். இதனை மாதம் 5 ஆயிரம் என்று மூன்று தவணையாக கட்டும் போது 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள். இப்போது மேலே சொன்ன கணக்கோடு ஒப்பிட்டு பார்த்தால்  உண்மை என்ன என்பது விளங்குமே.

இதில் இன்னொரு கூத்தும் இருக்கிறது. எந்த தள்ளுபடியும் கிடையாது. செல்போன் விலை 15 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் வட்டியான 2 ஆயிரத்து 250 ரூபாயை சேர்த்து 17 ஆயிரத்து 250 ரூபாய் என்று சொல்லுவார்கள். இதை மூன்று மாத தவணையில் மாதம் 5 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்துவீர்கள். நீங்கள் செல்போனின் விலையை மடடும்தான் கொடுத்து வாங்கினோம் என்று நினைப்பீர்கள். கூடுதலாக எந்த பணமும் கொடுக்க வில்லை என்று எண்ணுவீர்கள். ஆனால் உண்மை இல்லை.

இந்த நுகர்வோர் சாதனக் கடன் வாங்க சில தகுதிகள் இருக்க வேண்டும். உங்கள் வயது, வேலை, வேலை செய்யும் நிறுவனம், மொத்த சம்பளம், நிகர சம்பளம் ஆகியவற்றை கணக்கீட்டு உங்களுக்கான கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் வாங்கும் நுகர்வோர் சாதனத்தின் விலையை அப்படியே கடனாக அளிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட சதவிகிதம் பணத்தை செலுத்திய பின்னர்தான் கடனில் அந்த நுகர்வோர் சாதனம் அளிக்கப்படுகிறது.

 உதாரணமாக நுகர்வோர் சாதனத்தின் விலை ஒரு லட்சமாக இருக்கும் பட்சத்தில் 80 ஆயிரம் ரூபாய் மடடுமே கடனாக கொடுக்கப் படுகிறது. மீதி 20 ஆயிரம் ரூபாயை மார்ஜின் பணமாக அதை உங்கள் கைவிட்டு கடைக்காரருக்கு அளிக்கிறீர்கள்.

இந்த நுகர்வோர் சாதனக் கடனானது குறைந்த காலத்தில் திரும்பி செலுத்தும் விதத்தில் கொடுக்கப் படுகிறது. அதாவது ஆறு மாதம் முதல் அதிக பட்சம் மூன்று வருட காலம் வரைதான் அளிக்கப்படுகிறது. இக்கடனுக்கு எந்தவித வரி சலுகையும் கொடுப்பதில்லை.

இந்த வகை கடன்களை முன்கூட்டியே கடன் செலுத்தும் காலத்திற்குள் திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் கட்டணமும் வசூலிக்கப்படும். இது கடன் நிலுவைத் தொகையில் மூன்று சதவிகிதம் முதல் ஐந்து சதவிகிதம் வரை வசூலிக்கப்படும்.

இந்த நுகர்வோர் சாதனக் கடனில் பொருட்களை வாங்குவது சரியா தவறா என்பது உங்களை பொறுத்துதான் இருக்கிறது. அந்த நுகர்வோர் சாதனம் அவசியம் என்றால் இக்கடனில் வாங்கலாம், நண்பர்கள், உறவினர்கள் வாங்கியிருப்பதால் நாமும் வாங்கவேண்டும் என்று வரட்டு கவுரவத்திற்காக வாங்குவதுதாக இருந்தால் வேண்டாம் என்றுதான் சொல்வேன்" என்றார் முத்துகிருஷ்ணன்.


கட்டுரையாளர்: குட்டிக் கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation