இந்தியாவில் முதல்முறையாக உற்பத்தியை துவக்கும் அமேசான்

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2021 14:32

சென்னை,

அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான அமேசான் (Amazon) மத்திய அரசின் ஆத்மநிர்பார் பார்த் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக தன் அமேசான் பையர் டிவி ஸ்டிக்-ஐ (Fire TV Stick) சென்னையில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

ஆப்பில், சாம்சங் உட்பட பல முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக உற்பத்தி தளத்தை அமைத்து விரிவாக்கம் செய்து வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் அமேசான் தனது பையர் டிவி ஸ்டிக்-ஐ தயாரிக்க உள்ளது.

சென்னையில் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்திருக்கும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் கிளை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து அமேசான் தனது உற்பத்தியை துவங்க உள்ளது. இக்கூட்டணி 2021ம் ஆண்டுக்குள் தனது தயாரிப்பைத் துவங்கவும் முடிவு செய்துள்ளது.

அமேசானின் இந்தத் திட்டம் குறித்து அந்நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவின் தலைவரான அமித் அகர்வால், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு விவரித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் அமேசான் நிறுவனத்தின் இந்த திட்டம் குறித்து பதிவிட்டார்.

‘‘இந்தியா ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாகும். மேலும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு துறையில் உலகளாவிய விநியோக சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது. சென்னையில் ஒரு உற்பத்தி பிரிவை அமைப்பதற்கான அமேசான் நிறுவனத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் இது உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்துவதோடு, வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் ” என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அமேசான் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1000 கோடி டாலரை முதலீடு செய்யவுள்ளது. அதன் மூலம் 1 கோடி சிறு, குறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி 2025ம் ஆண்டுக்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.