பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 19:51

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வைணவத் தலங்களில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. வைகுண்ட ஏகாதேசியான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் சுவாமி அழகிய மன்னர் ராஜகோபால சுவாமிக்கு அனந்த சயன சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் தோளுக்கினியானில் சுவாமி ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்கள் பாடப்பட்டது அதனை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் வீதி உலாவாக   வரப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆழ்வார்கள் எதிர் சேவையும் சொர்க்கவாசல் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது.