உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தேடி தாருங்கள்: திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2022 15:48

சென்னை,

உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேண்டுகோள் விடுத்தார்.

தைப் புத்தாண்டையொட்டி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தொகுதி கழக நிர்வாகிகள் - பாக முகவர்கள் உள்ளிட்ட 5000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள், சேலை, வேட்டி, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்

நீங்கள் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தொகுதிக்கு மட்டுமல்ல: தமிழ்நாட்டுக்கே சொந்தமானவர், என்றும்  இந்தியாவிற்கே சொந்தமானவர் என்றும் இங்கே பேசியவர்கள் கூறினார்கள், இது விஐபி தொகுதி என்றும் கூறினார். இந்த தொகுதி தலைவர் கலைஞர் நின்று வென்ற தொகுதி. இந்த தொகுதி யார் நின்றாலும் விஐபி தொகுதி தான்.

உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து வெற்றிகளை குவிகக வேண்டும, சட்டமன்றத்தேர்தலில் எப்படி வெற்றி பெற வழிவகுத்தீர்களோ அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் உழைக்க வேண்டும்.

இந்த தொகுதியில் 7 மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது, அது மட்டுமல்ல. துணை மேயர் பதவியும் கிடைக்கலாம். மேயர் பதவியே கிடைக்கலாம். அதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுப்பார். 

உள்ளாட்சித் தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் நீங்கள் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும், உங்களுடைய  வெற்றிக்காக, உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று உதயநிதி  ஸ்டாலின் பேசினார்