மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் பார்க்கிங்கில் உள்ள கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க கோரிய வழக்கு - டெண்டரை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 22:11

மதுரை,


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

13ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்குள் கடை வைத்துள்ளோம்.

கடந்த 2.2.2018ல் கிழக்கு கோபுரம் பகுதியில் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் தீயில் எரிந்தன.


இதையடுத்து கடைகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.


எங்களின் வாழ்வாதாரததை பாதுகாத்திட மாற்று இடம் வழங்கவில்லை.


பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன.


இந்த கடைகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் நடக்கவுள்ளது.


இங்குள்ள கடைகளில் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், அதுவரை இந்த டெண்டருக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை  விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன்,


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மல்டி லெவல் பார்க்கிங்கில்  கடைகளுக்கான டெண்டர் நடத்தலாம் எனவும் அந்த டெண்டரில் ஏற்கனவே கோவிலில் கடை வைத்திருந்தவர்கள் பங்கேற்கலாம் எனவும் டெண்டர் குறித்த இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.