திருத்தங்கல் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 22:12

சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வாளர், மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள், நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என மொத்தம் 270 பேர் பணிபுரிந்துவருகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பல முறை அதிகாரிகளிடம் சம்பளப்பணத்தை வழங்க கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லாத நிலையில், இன்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு கூடிய தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும், அலுவலகம் முன்பு அமர்ந்து  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அலுவலகம் வந்த நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து நகராட்சி ஊழியர்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களாக சம்பளப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பண்டிகை காலங்களில் ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் வழங்குவதற்கு அரசு அறிவித்த நிலையில், முன்பணமும் வழங்கப்படவில்லை. சம்பளப்பணம் கிடைக்காத நிலையில் குடும்பச் செலவுகளை கவனிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.