சசிகலாவுக்கு பொழுது போகாததால் அதிமுக பொதுசெயலாளர் என்று கூறி கட்சிக்கொடியை ஏற்றினார் - இபிஎஸ் கிண்டல்

பதிவு செய்த நாள் : 20 அக்டோபர் 2021 15:32

சென்னை

சசிகலாவுக்கு பொழுது போகாததால் அதிமுக பொதுசெயலாளர் என்று கூறி கட்சிக்கொடியை ஏற்றியுள்ளதாக எடப்பாடி கே பழனிசாமி  இன்று கிண்டல் அடித்துள்ளார்

அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கவர்னர் ஆர்.என். ரவியை இன்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்து மனுவொன்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி.

தமிழக ஆளுநரை சந்தித்து அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து விளக்கமாக,தெளிவாக பேசி புகார் மனு அளித்துள்ளோம். இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக தில்லுமுல்லு செய்து,முறைகேடு செய்து ஜனநாயகபடுகொலை செய்து வெற்றி பெற்றவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையம் கைப்பாவையாக அரசு சொல்வதை அப்படியே கேட்டு நிறைவேற்றியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் முறையாகத் தேர்தல் பணிகளைக் கவனிக்கவில்லை.

ஆங்காங்கே போட்டியிட்ட வேட்பாளர்கள் இந்த 9 மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பல இடங்களில் புகார் அளிக்கச் சென்றபோது அவர்களிடம் முறையாகச் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் அதனை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.இதனை மாவட்ட கலெக்டரின் கொண்டு சென்ற 6 மணி நேரம் கழித்துத்தான் அதனை அறிவித்துள்ளனர். ஆனால் திமுக வெற்றிபெற்றதை உடனுக்குடன் அறிவித்தார்கள். அதோடு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிமுகவினரை தோல்வி அடைந்ததாக பல்வேறு இடங்களில் அறிவித்துள்ளார்கள்.

எந்ததெந்த இடத்தில் தவறுகள்,முறைகேடுகள் நடந்தது என்று விளக்கமாகத் தெளிவாக கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.

நீதிமன்ற உத்தரவைத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை.இந்த அரசும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற என்னென்ன யுக்திகளைக் கையாண்டு  வெற்றிபெறச் செய்துள்ளார்கள்

வாணியம்பாடி தொகுதியில் ஆலங்காயம் என்ற ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினரே வாக்கு பெட்டி உள்ள மையத்திற்கு சென்று வாக்கு பெட்டியை எடுக்கின்ற காட்சி அனைத்து தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது..வாக்கு பெட்டி எடுத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும்  எடுக்கபடவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு  அமைச்சரின் உதவியாளர் பார்கிங் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவைத்துள்ளார். அந்த வாகனத்தை எடுக்கவேண்டும் என்று போக்குவரத்து காவலர் தெரிவிக்கிறார்.அந்த வாகனத்தில் வந்த உதவியாளர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கிவந்து அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் முன்னிலையிலே கன்னத்தில் அறைகின்றார். அமைச்சரின் உதவியாளர் போக்குவரத்து காவலரை அடிக்கிறார். மக்களை பாதுகாக்கக்கூடியவர்களுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதை எண்ணிபார்க்க வேண்டும்.போக்குவரத்து காவலர் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் புகாராக காவல் நிலையத்தில் பதிவு செய்கிறார்.ஆனால் அவரை மிரட்டி அந்த புகாரை திரும்பப்பெற செய்கிறார்கள்.

தூத்துக்குடி எஸ்.பி. நடைபெற்ற சம்பவம் உண்மை என்று தெரிவிக்கிறார். ஆனால் புகார் அளித்தவர் புகாரைத் திரும்பப் பெற்ற காரணத்தினால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார்

.இது உண்மையில் தவறு. அவர் ஒரு காவலர்.புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாவட்ட எஸ்.பி. புகார் வாபஸ் பெற்றகாரணத்தினால் வழக்குப் பதிவு செய்யவில்லை  என்கிறார். காவலருக்கே இந்த நிலை என்றால் காவலர் எப்படி மக்களைக் காப்பாற்றுவார்.காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை தமிழகத்தில் நிலவி வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் ரெய்டு நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை.ஏன் என்றால் அம்மா அவர்கள் இருக்கும்போது இப்போது இருக்கின்ற பல முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டுள்ளது. சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனை எல்லாம் மறைப்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக சோதனை நடத்திவருகிறார்கள்.

எங்களுக்கு மடியிலே கனமில்லை.வழியிலே பயமில்லை.5 மாத காலத்தில் கொள்ளை அடித்த பணத்தை வைத்துதான் ஒவ்வொரு மாவட்டத்திலும்,9 மாவட்டத்தில் மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சியில் வெற்றி பெற்றது. அதில் ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய். எங்களுடைய மாவட்டத்திலே மாவட்ட கவுன்சிலில் நடந்தது. ஒரு  புடவை, வேஷ்டி, ஒரு எவர்சில்வர் தட்டு.இப்படி அளித்துதான் வெற்றிபெற்றார்களே தவிர இவர்களுடைய திட்டத்தைச் சொல்லி இவர்கள் வெற்றிபெறவில்லை.

எங்கள் அதிமுக  ஆட்சி இருந்தபோது நான் முதலமைச்சராக இருந்தபோது 2019ல் தேர்தல்  அறிவிக்கப்பட்டது. ஜனநாயமுறைப்படி தேர்தலை நடத்தினோம்.யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அதை முறைப்படி அறிவித்தோம். அதில் திமுகவும் அதிமுகவும்  சரிசமமாக வெற்றிபெற்றோம்

பொது செயலாளர் என்று சசிகலா  சொல்லிவிட்டுப் போகட்டுமே.இதில் என்ன இருக்கிறது. யாருக்கு என்ன பயம்.

வெளிப்படையாகச் சொல்லக்கூடாது.

ஏற்கனவே நீதிமன்றம்,தேர்தல் ஆணையம்  நாங்கள்தான் அதிமுக என்று தெரிவித்துவிட்டது.தேர்தலும் முடிந்துவிட்டது.அவர்கள் பொழுதுபோகாமல்  கூறிவருகிறார்கள்.

கொடி பயன்படுத்தியது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  எடப்பாடி கே. .பழனிசாமி தெரிவித்தார்.