கல்லிடைக்குறிச்சியில் விவசாயி தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 30 பவுன் நகை மாயம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 20:59

நெல்லை,


கல்லிடைக்குறிச்சியில் விவசாயி தனது மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 30 பவுன் நகை மாயமானது.


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன மகன் இசக்கிமுத்து (50). விவசாயி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவரது மகளுக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதற்காக 30 பவுன் நகை வாங்கி பீரோவில் உள்ள லாக்கரில் வைத்துள்ளனர்.

 இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறைக்கதவைத் திறந்து பிரோவை பார்த்தபோது லாக்கர் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து மனைவி அதில் வைத்திருந்த நகையை தேடியபோது நகை பாக்ஸ் மட்டும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 30 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதையடுத்து வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.


 இதுகுறித்து இசக்கிமுத்து கல்லிடைகுறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.


 விவசாயி வீட்டில் கதவு, பீரோ உடைக்கப்படாமல் நகை மாயமானதால் சாவி வைத்திருக்கும் இடம் தெரிந்த நபர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.