போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் சென்னை மாநகரில் கொரோனா விழிப்புணர்வு பணி

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2021 18:51

சென்னை

சென்னை மாநகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை பெருநகரில் கொரோனா பரவல் தற்போது முன்பை விட அதிகரித்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர்  இன்று சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான  சென்னை தி.நகர்- ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை - காந்தி சிலை, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

கடந்த 2 நாட்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தீவிர தடுப்பு சோதனையில், முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 4,362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் ரூ.8,72,400- வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.