தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடக் கோரிய வழக்கு : அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 20:06

தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 2016-ல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியை பிடித்தது. இருப்பினும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுபான கடைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மது பழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை முடித்து வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.