குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 19:38

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், புத்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூபாய் 12.96 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் ஒரு வகுப்பறைக் கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

   இதனைத் தொடர்ந்து, தொட்டியம் ஒன்றியம், பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 12 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் லேப் என்கிற தொழிற்க்கல்விக்கான அறிவியல் ஆய்வகத்தினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து அங்கு வைக்கப் பட்டிருந்த அறிவியல் கருவிகள் குறித்த விளக்கத்தினையும், செயல்படும் தன்மையையும், ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.  

   பின்னர், உயிரியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், ஸ்மார்ட்கிளாஸ் வகுப்பறை ஹைடெக் கணினி ஆய்வகம், அனைவருக்கும் கல்வி இயக்க வகுப்பறை ஆகியவற்றை மாண்புமிகு அமைச்சர்; அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

   தமிழக முதல்வரின் அறிவுரையின்படி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றோம். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் என்னால் நேரடியாகப் பார்வையிட்டு மாணவர் சேர்க்கை, தேவையான அடிப்படை வசதிகள், பள்ளிகளின் செயல்பாடுகள், தூய்மையாகப் பள்ளி வளாகத்தைப் பராமரித்தல் போதுமான கட்டமைப்பு வசதிகள்  உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் மருத்துவத்துறைக்கும், கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவரது, சீரிய எண்ணத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஏற்ப கல்வித்துறையில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   எனவே, இப்பகுதி உள்ளிட்டு அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் கல்வி கற்க அரசுப் பள்ளிக்கு வருகை தர வேண்டும். அவர்களுக்கான தேவைகள், வசதிகள் பூர்த்தி செய்யப்படும். விளையாட்டு மற்றும் கட்டமைப்புகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

   முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது; பள்ளிகள் தற்போது இயங்காத சூழ்நிலையில், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது அவர்களின் பிள்ளைகளும் வேலைக்குச் செல்வதாகத் தெரிகிறது. குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்ககூடாது என்பதிலும் அத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.  

   ஆகவே இதுபோன்ற பள்ளிப் படிப்பிலிருந்து பாதியில் நின்று வேலைக்குச் செல்வோரை கல்வி அலுவலர்கள் மூலம் கணக்கெடுத்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆன் லைன் வகுப்பிற்கு அதிக வசதிகள் உள்ளது.  ஆனால் அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை இருக்கின்ற வசதிகளை பயன்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான பாடங்கள் நடத்தப்பட்டும், அறிவுரைகள் வழங்கப்பட்டும் வருகின்றது.

   சில கிராமங்களில் தொலைபேசித் தொடர்பு கொள்ளக் கூட முடியாத அளவில் இருக்கிறது. இது குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி உள்ளேன். குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். பள்ளிகள் திறப்பிற்குப் பின் பள்ளி மாணவிகள் நலன்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் விழிப்புணர்வு குறித்த கல்வி கொண்டு வரப்படும் என்ற தெரிவித்தார்.

   இந்நிகழ்வுகளில், முசிறி சார் ஆட்சியர் ஜோதிசர்மா, முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சிந்துஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, மருங்காபுரி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.பழனியாண்டி, ஒன்றிய பிரமுகர் ராமசாமி, செல்வராஜ், சின்ன அடைக்கன் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.