துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த பயிற்சி டிஎஸ்பிக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

பதிவு செய்த நாள் : 20 ஜூலை 2021 13:03

சென்னை

துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த பெண் பயிற்சி டிஎஸ்பிக்கு தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி வழங்கி  ஊக்குவித்தார்.

சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் காவலர் தலைமை பயிற்சி மையமான தமிழ்நாடு போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு புதிதாக டிஎஸ்பிக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஎஸ்பிக்களுக்கிடையே சிறிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில் பயிற்சி டிஎஸ்பி ராகவி முதலிடத்தைப் பெற்றார். தமிழக காவல்துறை சட்டம், ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஊனமாஞ்சேரிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த டிஎஸ்பி ராகவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினார்.