அமைச்சரா? தினகரனா? கோவில்பட்டி தொகுதியில் கடும் போட்டி

பதிவு செய்த நாள் : 31 மார்ச் 2021 15:12

கோவில்பட்டி

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த முறை வெற்றி பெறுவாரா? அவரை எதிர்த்து டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு, டிடிவி தினகரன்  இருவரையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் போட்டியிடுகிறார்

இம் மூவருக்கும் இடையில் நடக்கும் போட்டியாக கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தல் அரங்கேற உள்ளது.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பாரம்பரியமாக தெலுங்கு பேசும் கம்மவார் நாயக்கர் வாக்காளர்களைப் பெரும்பான்மையாக கொண்டதாகும். ஆனால் 2011ஆம் ஆண்டு தொகுதி சீரமைக்கப்பட்டது. அப்பொழுது கோவில்பட்டி தொகுதியில் பெரும்பான்மையான வாக்காளர்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக மாறிவிட்டது.

இந்த மாற்றம் வந்தபிறகும் கோயில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் 2 முறை போட்டியிட்டு கடம்பூர் ராஜு வெற்றிபெற்றுள்ளார். அவர் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டு இயங்கி வருகிறார்.

கடம்பூர் ராஜு தெலுங்கு மொழி பேசும் கம்மவார் நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 400 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடவில்லை.

திமுக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியை தனது கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டது.

மார்க்ஸிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சீனிவாசன் தெலுங்கு மொழி பேசுபவர்.

டிடிவி தினகரன் முக்குலத்தோர் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு கடவூர் ஜமீன்தார் ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் டிடிவி தினகரன் கட்சிக்கு ஆதரவாக கடம்பூர் ஜமீன்தார் பாடுபட்டார். கயத்தாறு ஒன்றியத்தை மட்டுமே அ.ம.மு.க கைப்பற்ற முடிந்தது.

கோவில்பட்டி ஒன்றியம் அமமுகவுக்கு கிடைக்கவில்லை.

இது ஒரு யதார்த்தமான உண்மை.

கோவில்பட்டி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் நாயக்கர் இனத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் தேவர் இனத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் கட்டுப்படுவதில்லை.

 அதனால்தான் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் நடந்த சம்பவம் காரணமாக கோவில்பட்டியில் போட்டியிடுவதை மதிமுக தலைவர் வைகோ கைவிட்டார்.

இந்தச் சம்பவம் காரணமாக தேவரின வாக்குகள் மதிமுகவுக்கு கிடைப்பது நிச்சயமற்ற நிலை ஆக மாறியது.

திமுகவைப் பொறுத்த மட்டிலும் அதேதான் கணக்கு. எனவேதான் கூட்டணிக் கட்சிக்கு கோவில்பட்டியை கொடுத்துவிட்டது.

கோவில்பட்டி நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நாயக்கர்கள் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

தொகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகளைத் கையகப்படுத்த கடம்பூர் ஜமீன்தார் உதவியுடன் டிடிவி தினகரன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நாயக்கர் வாக்குகள் பிரியாமல் தடுப்பதில் கடம்பூர் ராஜு வெற்றி பெற வேண்டும்.

அதேபோல, தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளும் பிரியாமல் இரட்டை இலைக்கே கிடைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வெற்றியை உறுதி செய்ய இயலும்.