கல்குவாரி அமைக்க தடை கோரிய வழக்கு - தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 22:59

மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கல் குவாரி அமைக்க தடை கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த இன்னாசிமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான் குளம் கிராமத்தில், கல் குவாரி நடத்த சிலர் அனுமதி கோரியுள்ளனர், கல் குவாரி நடத்த அனுமதி கோரிய இடத்திற்கு அருகே சுடலை மாடசாமி கோயில் உள்ளது. மேலும் சுமார் 50 மீட்டர் தூரத்தில் எவ்வித கட்டிடம் இருக்க கூடாது என்பது அரசின் விதி. ஆனால் அரசு நிர்ணயித்த விதிகளை மீறி கல்குவாரி அமைக்க சிலர் விண்ணப்பித்துள்ளனர், இது சட்டவிரோதமானது. மேலும் அப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். கல்குவாரி சுமார் 100 அடி ஆழத்திற்கு தோண்டினால் விவசாயத்திற்கு தண்ணீர் பாசனம் பாதிக்கும் அபாயம் உள்ளது. 

தற்போது சிலர் மீரான் குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க திட்டமிட்டுள்ளனர், கல் குவாரி அமைக்க தடை கோரி, இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சாத்தான்குளம் தாலுகா மீரான் குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்பே குவாரி நடத்த அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.