வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தேனி திருடன் கைது: ரூ. 8 லட்சம் நகைகள் மீட்பு

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 20:35

சென்னை, அபிராமபுரம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிய குற்றவாளி கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டது.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 36). நிலக்கரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதியன்று வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்று விட்டார். 20ம் தேதியன்று இரவு வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அபிராமபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கைரேகை பதிவுகளை கொண்டும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விஸ்வநாதன் வீட்டில் கைவரிசை காட்டிய தேவாரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 8 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டது. விசாரணையில் குற்றவாளி வெங்கடேசன் மீது சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் கம்பம் ஆகிய இடங்களில் வீடு புகுந்து திருடியது தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளி வெங்கடேசன், விசாரணைக்குப் பின்னர்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.