திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் மூலவருக்கு தங்க அங்கி அணிய கோரிய வழக்கு தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2021 16:45

மதுரை,

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் திருடப்பட்டு மீண்டும் பறிமுதல் செய்யப்பட்ட நகையிலிருந்து மூலவருக்கு தங்க அங்கி செய்து அணிய கோரிய வழக்கில், மூலவருக்கு தங்க அங்கி செய்வதற்கு தேவைப்படும் நகையை மனுதாரர் வழங்கலாம் அல்லது நன்கொடை பெற்று தங்க அங்கி செய்ய ஏற்பாடு செய்யலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டம் அறமண்ணத்தை சேர்ந்த ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் 3500 ஆண்டுகள் பழமையானது. மன்னர் பரம்பரை நிர்வாகத்தின் கீழ் இருந்த கோவிலானது, சுதந்திரத்திற்குப் பிறகு திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பல கோடி மதிப்புள்ள நகைகள் உள்ளன. இந்த கோவிலில் இரண்டு முறை கோவில் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த நகைகளில் சில மீட்கப்பட்டு மாவட்ட நீதிமன்றம் மற்றும் கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, 6 மாதங்களுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதுவும் நடக்காமல் தற்போது 2021 ஆம் ஆண்டு உத்திராயணம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக கும்பாபிஷேக நடத்தப்பட வேண்டுமென பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வரும் ஜூன் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, நீதிமன்ற  பாதுகாப்பிலும், அரசு கருவூலத்திலும் வைக்கப்பட்டுள்ள நகைகளை பெற்று மூலவராகிய ஆதிகேசவப் பெருமாளுக்கு தங்க அங்கி பழமை மாறாமல் செய்யவும், இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும், கோவில் நகைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க அங்கி செய்வதற்கு மீதம் உள்ள தங்கத்தை மனுதாரர் வழங்கலாம் அல்லது பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று தங்க அங்கி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை கூறி வழக்கை முடித்து வைத்தனர்.