சிவகாசி அருகே ஆவணம் இல்லாமல் வங்கிக்கு கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 05 மார்ச் 2021 19:44

சிவகாசி,

சிவகாசி அருகே முறையான ஆவணம் இல்லாமல் வங்கிக்கு செலுத்த கொண்டு சென்ற ரூ. 4 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பகுதியில் உள்ள ஒத்தப்புலி கிராமத்தில் இன்று, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இடையன்குளம் பகுதியில் உள்ள, பெட்ரோல் பங்கின் மேலாளர் புதியராஜ் என்பவர், பெட்ரோல் பங்கில் வசூலான 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை, சிவகாசியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். புதியராஜிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடமிருந்த 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.