நெல்லை மாநகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க 7 சோதனைச் சாவடிகள் , 24 மணிநேரமும் ரோந்து பணி , மாநகர துணை ஆணையர் தகவல்

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 21:59

நெல்லை மாநகர பகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் விதமாக 25  இருசக்கர ரோந்து வாகனம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சீனிவாசன்  தெரிவித்துள்ளார் .

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க துணை ராணுவப் படையைச் சேர்ந்த 84 வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

 நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் நெல்லை மாநகர பகுதிகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையாளர் சீனிவாசன் நெல்லை மாநகர பகுதிகளில் தேர்தல் தொடர்பான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிக்காக நாகாலாந்தில் இருந்து 84 துணை ராணுவப்படையினர் வருகை தந்துள்ளனர் . மாநகரப் பகுதி முழுவதும் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது. மேலும் தேர்தல் விதிமுறைகள் மீறாமல் சட்டம் ஒழுங்கை முறையாக பின்பற்றுவதற்காக 25 இருசக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு மூன்று வாகனங்கள் வீதம் 24 மணி நேரமும் வாகன தணிக்கை மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளில் ரோந்து வாகனத்தில் உள்ளவர்கள் ஈடுபடுவார்கள் என கூறினார் .