கப்பியறையில் விதி மீறி அனுமதி வழங்கப்பட்ட கல் குவாரிகள் குறித்து சிபிசிஐடி விசாரணை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 21:01

மதுரை,

கல்குளம் தாலுகாவில் கப்பியறை கிராமத்தில் விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட கல் குவாரிகள் குறித்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட குவாரிகளால் ஏற்பட்ட  சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், அதை மீட்பது குறித்தும்  தொழில் துறை  சார்பில்  ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்  செய்யவும் உயர்நீதிமன்றம் மதுரை  கிளை உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டம்  தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. ஆண்டுதோறும் மழை பெய்யும். இங்கு கல்குளம் தாலுகாவில் கப்பியறை கிராமத்தில்  கருணைமாதா மலை என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையை சுற்றிலும் பல கிராமங்கள், கண்மாய்கள் உள்ளன. இந்த மலையில் கல் குவாரி நடத்த கடந்த 2016 ஆம் ஆண்டு  சிலர் உரிமம் பெற்று உள்ளனர். குவாரி நடத்த வேண்டும் என்றால் அந்த இடத்தை சுற்றி 300 மீட்டர் தூரத்துக்கு கிராமங்களோ, கோவில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களோ, நீர்நிலைகளோ இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் அந்த விதிகளை பொருட்படுத்தாமல் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி உரிமம் பெற்று உள்ளார். அவர்களுக்கு உடந்தையாக அரசு அதிகாரிகள் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோதமாக இயங்கும் அந்த கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த சட்டவிரோத கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். தவறான அறிக்கை அளித்த அதிகாரிகள் மீதும், இதுதொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்த கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பில் குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட து. இதை  தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

இந்த பகுதியில் விதிகளை மீறி கல்  குவாரி , கிரானைட்  குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட குவாரிகளால் ஏற்பட்ட  சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்  அதை மீட்பது குறித்தும் தொழில் துறை சார்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்  செய்ய  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஜூன் மாதம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.