பழையாறு புதிய தடுப்பணைக்கு தடை கோரிய வழக்கு; நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 19:01

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் பழையாறு ஆற்றுக்கு குறுக்கே கட்டப்படயிருக்கும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கன்னியாகுமரி திருச்சபை சிஎஸ்ஐ பேராயர் செல்லையா மனு தாக்கல் செய்தார். அதில்," கன்னியாகுமரி மாவட்டத்தில் சிஎஸ்ஐ திருச்சபைக்கு  ஏராளமான நிலங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா தாமரைகுளம் கிராமம் அருகே பழையர் ஆற்று குறுக்கே தடுப்பணை கட்ட அரசு திட்டமிட்டது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதால், நீர் தேங்கி ஆற்றுப்படுகையில் அருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் சேதம் அடையும் நிலை உள்ளது. மேலும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு முறையாக எவ்வித டெண்டர் அறிவிப்பு விடப்படவில்லை. எனவே பழையர் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்படயிருக்கும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.