அங்கன்வாடி பணியாளர்கள் காலமுறை ஊதியம் வழங்க கோரி , ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 20:11

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேறட்டோர் காலவரையறையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் .

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும் அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப நல ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி கொடையாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் அங்கன்வாடி உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்   

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் . ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்