விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 19:37

விருதுநகர்,

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்தார். 


ஆனால் இது வரை அங்கன்வாடி ஊழியர்களை, அரசு ஊழியர்கள் ஆக்கவில்லை. உடனடியாக தமிழக அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரியும், அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க கோரியும், பணி ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடையாக வழங்கக் கோரியும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.