சென்னையில் 74 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது

பதிவு செய்த நாள் : 20 பிப்ரவரி 2021 20:12

சென்னை,

திருவொற்றியூர் அரசு புற மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 12ம் தேதி 74 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஜெயகுமார் என்ற நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பிப்ரவரி 12ம் தேதி திருவொற்றியூர் அரசு புற மருத்துவமனை வளாகத்தில் பலத்த காயங்களுடன் மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதே நாளில் மாலை அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையிலான குழு விசாரணைகளைத் தொடங்கியது.

சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் 32 வயது ஜெயக்குமாரை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் குற்றம் செய்ததை ஜெயக்குமார் ஒப்புக்கொண்டார். தன் பெற்றோரை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய ஜெயக்குமார் வழியில் டாஸ்மாக்கில் குடித்துள்ளார்.

பின்னர் போதையில் குறுக்கு வழியில் செல்லும் போது சாலை ஓரம் பெண் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்த கல்லை அவர் தலையில் போட்டு அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

உயிரிழந்த மூதாட்டிக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். மருமகளுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் அன்று சம்பவம் நடந்த மருத்துவமனை வளாகத்திற்கு வந்ததாக வாஷர்மென்பேட்டையின் துணை ஆணையர் ஜி சுப்புலட்சுமி, தெரிவித்தார்.