புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற தீர்மானம் என கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா தமிழ் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று (பிப்.13) நடந்தது.
மாநில தலைவர் அப்துல் ரகுமான் வைத்து துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் கசாலி மீரான் வரவேற்றார். தேசிய துணை தலைவர் ஜாஹிர் சிறப்புரை ஆற்றினார். மாநில பொது செயலாளர் அஷ்ரப், ஓராண்டு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் பின்னர் மாநில நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில தலைவராக அஷ்ரப், மாநில பொதுச்செயலராக முஹமது, மாநில துணைத் தலைவர்களாக அப்துர் ரகுமான், நிஷா, மாநிலச் செயலர்கள் அய்யூப், இப்ராஹிம் மாநில பொருளாளராக சர்வத் ரபீக், மாநிலக் குழு உறுப்பினர்களாக முஸ்தபா அபுதாகிர், ஜாஸிம் ஷேக் ஒலி, அனிஸ் பாத்திமா, கதீஜா மசூதா, நபிஷா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள் பயன்பாட்டை தடுத்து அதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்த வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், பல்கலை., வளாகங்களில் மத சாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும், அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விரைந்து நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அண்ணா பல்கலை., உள்ளிட்ட சில பல்கலை., களில் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உறுதி செய்யப்பட வேண்டும், பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் சட்டங்கள் இயற்றி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும், மாணவ, மாணவியரின் கல்விக் கடன்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பல்கலை., களில் உதவிப்பேராசிரியர் நியமனங்கள் பிஹெச்டி கட்டாயம் என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.