ராஜபாளையம் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.....

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 20:14

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி மற்றும் அம்பலபுளி பஜார் பகுதிகளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை நெசவு தொழில் நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

தறி நூல் விலை கடந்த ஒரு மாதமாக கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 900 ரூபாய்க்கு கிடைத்து வந்த நூல், தற்போது ஆயிரத்து 300 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சாயப்பட்டறைகளிலும், துணிகளுக்கு கலர் ஏற்றுவதற்கான கூலியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சிறு விசைத்தறிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பாண்டியராஜன் கூறும்போது,

நூல் விலை கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே, விசைத்தறிகளை இயக்க முடியும். நூல் விலை குறையும் வரை சங்க உறுப்பினர்கள், சங்கம் சாராத உறுப்பினர்கள் அனைவரும், இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.