‘ப்ரான்க்’ என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக நேர்காணல் நடத்திய யூடியூப் சேனல் உரிமையாளர் உள்பட மூவர் கைது

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 10:38

ப்ரான்க் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக நேர்காணல் நடத்திய யூடியூப் சேனல் உரிமையாளர் உள்பட மூவரை சென்னை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் ‘ப்ரான்க்’ என்ற பெயரில் ஆபாசமாக பெண்களை நேர்காணல் செய்வது போல் நகைச்சுவையாக பேசி துாண்டி விட்டு அவர்களை ஆபாசமாக பேச வைத்து அதை வீடியோவாக பதிவு செய்வதாகவும், அதை யூடியூப் சேனலில் பதிவிடுவதாகவும் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் வந்தது.

 அதன்பேரில் சாஸ்திரி நகர் போலீசார் இன்ஸ்பெக்டர் பழவேசம், எஸ்ஐ முருகன், தலைமைக்காவலர் சண்முக சுந்தரம் தலைமையில் கண்காணித்தனர். அப்போது பெசன்ட் நகர் பீச்சில் இரண்டு இளைஞர்கள் கையில் மைக் மற்றும் கேமராவுடன் பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை நேர்காணல் எடுப்பது மற்றும் அதை தட்டிக்கேட்கும் பொதுமக்களை  ஆபாச வார்த்தைகளால் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அதனையடுத்து அவர்களை போலீசார் பிடித்து சாஸ்திரி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  அதில் ஒருவர் சென்னை நங்கநல்லுார், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (வயது 31) என்பதும் தெரியவந்தது. அவர் ‘சென்னை டாக்’ என்ற யூடியூப் சேனலை 2019ம் ஆண்டில் இருந்து நடத்தி வருவதாகவும் அதில் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஆசின் பத்சா (வயது 23) என்ற பெண் தொகுப்பாளராகவும், அஜய்பாபு (வயது 24) என்ற பெருங்குடி சீவரம் பகுதியை சேர்ந்தவர் கேமரா மேனாகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பீச் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு வரும் காதலர்கள் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து கேளிக்கையாக பேசி வீடியோ பதிவு செய்து வந்துள்ளனர். மேலும் பெண்களை ஆபசமாக காட்டும் வகையிலும் பதிவு செய்து பின்னர் அதில் ஆபாசமாக பேசும் வார்த்தைகளை தொகுத்து செய்து யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்த வகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளதும் அதை 7 கோடி மக்கள் இது வரை பார்த்துள்ளதும் தெரியவந்தது. மேலும் தங்களுக்கு தெரிந்த பெண்களை பொதுமக்கள் போல் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் யதார்த்தமாக நேர்காணல் எடுப்பது போல பேச வைத்துள்ளனர். அதை வைத்து மற்ற இளைஞர்களை பேசவைத்து அருவறுக்க தக்க வகையிலான வீடியோ பதிவுகளை செய்துள்ளனர் போன்ற தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து சென்னை டாக் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் மற்றும் அஜய்பாபு, ஆசின் பத்சா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். அடையாறு பகுதிகளில் பொது இடங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்தால் தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி எண் 8754401111 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டுள்ளார்.