ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை கருவி அமைக்கப்படும்... எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தகவல்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 18:45

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் வரவேற்றார்.

 நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசும் போது, கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவிப்பதாகவும், வரும் காலங்களிலும் உங்களது அனைவரின் சேவை தொடர வேண்டும், ராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையில் பெரும் போராட்டத்திற்கு  பின்பு சிடி ஸ்கேன் கொண்டு வரப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனவுடன், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேனர் கருவி பொருத்தப்படும். அதனால் இந்தப்பகுதி மக்கள் அனைவரும் மிகவும் பயன் பெறுவார்கள் என்று பேசினார். மேலும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தங்கும் விடுதியும் அமைக்கப்படும் என்று எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, கிளை செயலாளர் லட்சுமணன், சித்திரைசெல்வன், தம்பிதுரை, லட்சுமணன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.