பாஜவினரை பார்த்து கையசைத்தபடி நடந்து வந்த அமித்ஷா மீது பதாகை வீசிய நபரால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 18:34

பாஜவினரை பார்த்து கையசைத்தபடி நடந்து சென்ற அமித்ஷா மீது கூட்டத்தில் நின்ற நபர் பதாகை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா காரில் புறப்பட்டார்.

விமான நிலையத்தை ஒட்டிய ஜிஎஸ்டி ரோட்டில் வந்த போது திடீரென அமித்ஷா காரில் இருந்து இறங்கி அங்கு நின்றிருந்த பாஜ வினரை பார்ர்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அங்கு கூட்டத்தோடு கூட்டமாக கலந்து நின்ற ஒருவர் அமித்ஷாவை நோக்கி பதாகையை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் பெயர் துரைராஜ் (வயது 67) என்பதும் சென்னை நங்கநல்லுாார், பர்மா தமிழர்கள் காலனியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

இதே நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியன்று திமுகவை கண்டித்து பாஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்திற்குள் புகுந்து சலசலப்பை ஏற்படுத்தியவர் எனவும் தெரியவந்தது. அப்போது அவரை பழவந்தாங்கல் போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதேபோல் கடந்த 5ம் தேதியன்று திநகரில் உள்ள பாஜ அலுவலகமான கமலாலயத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்த போதும் அங்கு சென்று சலசலப்பை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

 இதே நபர் அமித்ஷா வரும்போதும்  பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது என்று நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சார்பில் முன்கூட்டியே எச்சரித்திருந்திருந்தார்களாம். அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.