லடாக் விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் · எம்பி.,கனிமொழி ரூ.2லட்சம் நிதி வழங்கல்

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2020 18:39

 காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் மரணம் அடைந்த கோவில்பட்டி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுகல் கூறி தனது சொந்தப்பணத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி உவி அளித்தார். அதேபோல துாத்துக்குடி எம்.பி., கனிமொழியும் ஆறுதல் கூறி ரூ. 2 லட்சம் நிதி உதவி அளித்தார். கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி (34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் நாயக் பதவி வகித்து வந்துள்ளார். காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் ராணுவத்தில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா (7), வைஷ்ணவி (5) என்ற இரு மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். கருப்பசாமியின் மறைவை அறிந்து, தெற்கு திட்டக்குளம் கிராமமே சோகத்தில்மூழ்கியுள்ளது. ஊரில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. கருப்பசாமியின் மறைவு குறித்து அறிந்ததும் தெற்கு திட்டக்குளம் சண்காபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை


அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை சென்றார். கருப்பசாமியின் மனைவி தமயந்தி மற்றும் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கருப்பசாமியின் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் துாவி மரியாதை செய்தார். அதேபோல கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., சின்னப்பன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். இதையெடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த பணத்திலிருந்து ரூ.5 லட்சம் கருப்பசாமி குடும்பத்திற்கு வழங்கினார். குழந்தைகளின் கல்வி செலவும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்த கருப்பசாமி விபத்தில் பலியானது என்பது அதிர்ச்சிக்குரியது, வேதனைக்குரியதும் ஆகும். கருப்பசாமி குடும்பத்திற்கு தமிழக முதல்வர் சார்பில் ஆறுதல் மற்றும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளோம். ராணுவத்திடம் இருந்து முழு தகவலையும் பெற்றவுடன், கருப்பசாமி குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் உதவிகளை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்போழுது, தனது சொந்த நிதியில் இருந்து நிதி வழங்கியுள்ளேன். கருப்பசாமியின் மனைவியின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க முதல்வரிடம் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழங்கும் நிதி உதவி மட்டுமின்றி, கருப்பசாமியின் குழந்தைகளின் கல்வி செலவிற்கும் உதவி செய்யப்படும் என்றார். கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்த போது, கருப்பசாமியின் குழந்தைகள் அழுவதை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். பின்னர் தன்னை தேற்றிக் கொண்டு, குழந்தைகளை அழைத்து ஆறுதல் கூறினார். கனி மொழி எம்.பி., ஆறுதல் இதேபோல, திமுக., மகளிர் அணி மாநில செயலாளரும், துாத்துக்குடி லோக்சபா உறுப்பினருமான கனிமொழி எம்.பி., தி.மு.க., எம்.எல்.ஏ.,கீதாஜீவன் ஆகியோரும் கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், கருப்பசாமி உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தனர். கருப்பசாமி குடும்பத்திற்க்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும் கனிமொழி எம்.பி., வழங்கினார்.

இதனை தொடர்ந்து, கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் பேசுகையில் நாட்டுக்காக சேவையில் ஈடுபட்டபோது தனது இன்னுயிரை கருப்புசாமி இழந்துள்ளார். அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு என்றைக்குமே திமுக., உடன் இருக்கும். கருப்பசாமி குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க., ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.