தொல்காப்பியத்தை தவிர உலகில் எந்த மொழிகளிலும் பொருளதிகாரம் இல்லை: தமிழ் அறிஞர் தகவல்

பதிவு செய்த நாள்

11
ஜூலை 2016
10:06

புதுக்கடை

உலக மொழிகளில் தொல்காப்பியத்தை தவிர்த்து வேறு மொழி இலக்கணங்களில் பொருளதிகாரம் இல்லை என தொல்காப்பியர் சிலை திறப்பு விழாவில் தமிழ் அறிஞர் ச. வே சுப்ரமணியம் தெரிவித்தார்.

          தமிழில் முதல் இலக்கண நூலான  தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காபியருக்கு அவர் பிறந்த ஊராக கருதப்படுகின்ற காப்புக்காட்டில் நேற்று சிலை திறக்கும் விழா நடந்தது. அனைத்திந்திய தமிழ் சங்கப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட  நிகழ்ச்சிக்கு பேரவை செயல் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். தலைநகர் தமிழ் சங்க நிறுவனர் புலவர் சுந்தரராசன் வரவேற்றார். உலக தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் பேராசிரியர் ச.வே சுப்ரமணியம் விழாவை துவக்கி வைத்து பேசியதாவது : தமிழின் அடையாளமான திருக்குறளை போல தொல்காப்பியமும் உள்ளது. ஆனால் இது உலக அளவில் பொது மக்களை சென்றடையவில்லை. நமது  பாடத்திட்டங்களில் கூட தொல்காப்பியத்துக்கு பிறகு  வந்த நன்னூலை மட்டுமே போதிக்கும் சூழல் உள்ளது. உலக மொழிகளில் வேறு எந்த  மொழிகளிலும் பொருளதிகாரம் இல்லை. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் மட்டுமே பொருளதிகாரம் உள்ளது. மனிதர்களின்  வாழ்வியலை போதிக்கும் திணை கொள்கைகளையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த  நூல் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து உலகறிய செய்யாதது பெரும் குறையாகும். தமிழர்களின் சோம்பலும், இயலாமையும்தான் இதற்கு  காரணம் என்று பேசினார். ஒரு இனத்தின் வரலாற்றை தாங்கி நிற்பது இலக்கியங்களே. இலக்கியங்களை புறக்கணித்தால் ஒரு இனத்தின்  வரலாறும்  அழிந்துவிடும். நிகழ்ச்சியில் தமிழாலய தலைவர் புலவர் பச்சைமால், விளாத்துறை ஊராட்சி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். தொல்காப்பியர் சிலையை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் எம்.ஆர் காந்தி திறந்து வைத்தார். தொல்காப்பியர் வரலாற்று நூலை அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் தமிழ் துறை தலைவர் அழகப்பன் வெளியிட, ஆன்றோ பெற்றுகொண்டார்.   பணம்பாரனார் படத்தை அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை பொது செயலாளர் முகுந்தன், நிலம்தரும் திருவில் பாண்டியன் படத்தை தலை நகர் தமிழ் சங்க அறக்கட்டளை தலைவர் வெள்ளைச்சாமி, அதங்கோட்டாசான் படத்தை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் பேராசிரியர் முகிலை ராசபாண்டியன்  திறந்து வைத்தனர்.  எழுத்தாளர் பொன்னீலன், குமரி முத்தமிழ் மன்ற தலைவர் முளங்குழி பா.லாசர், தமிழ் சான்றோர் பேரவை தலைவர் கண்ணன், எம் எல் ஏ., க்கள் மனோ தங்கராஜ், பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ராதாகிருஷ்ணன், டெல்லி தமிழ் சங்க பொது செயலாளர் கண்ணன், விக்னேஸ்வரா பள்ளி முதல்வர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரத கலாசார பேரவை தலைவர் பாஸ்கரன், பொருளாளர் மகேஸ்வரி நிகழ்சிகளை தொகுத்து வழங்கினர்.