குலசை., தசரா விழா: இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரினம் செய்ய அனுமதி– கலெக்டர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 20:00

உடன்குடி, அக்.17

குலசேகரன்பட்டணம் தசரா விழாவில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்துாரி தெரிவித்தார்.  குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் வளாகம், கடற்கரை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

  இந்நிலையில் நேற்று கலெக்டர் சந்திப்நந்தூரி திடீரென கோயில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

  மேலும் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கை கழுவும் வகையில் சானிடைசர்கள் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கலெக்டர் சந்தீப்நந்துாரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

144தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், பல்வேறு தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டும், விலக்கப்பட்டும் இருப்பதாலும் அதிக அளவில் பக்தர்கள், பொதுமக்கள் கூட அனுமதியில்லை. தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நடைபெறக்கூடிய 26ம் தேதி மற்றும் 27ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

 இலவச தரிசனம் உண்டு

  மேலும் மற்ற நாட்களில் 6ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 2ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் என தினமும் 8ஆயிரம் பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தரிசனம் செய்ய பதிவு செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும் அப்போது சாமி தரிசனம் செய்து கொள்ளவேண்டும்.

  இதில் கட்டண தரிசனம், இலவச தரிசனமும் உண்டு. பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரகார மண்டபத்தில் சூரசம்ஹாரம்

  பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். கடற்கரையில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது. சூரசம்ஹாரம் பிரகார மண்படத்திலேயே நடைபெறும். கிராமங்களில் உள்ள தசரா குழுக்கள், பக்தர்களுக்கு இன்று முதல் காப்புகள் வழங்க கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 வெளி மாநில, மாவட்ட பக்தர்களுக்கு தடை இல்லை

  தசரா குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர் மட்டுமே வந்து காப்பு பெற்றுக் கொள்ள வேண்டும். கோயில் பகுதியில் தசரா வேடம் அணிந்தும், பாடல் இசைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டணம் பகுதி, கோயில் பகுதியில் பக்தர்கள் யாரும் தங்க அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய தடைஇல்லை.

  அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் உள்ளிட்டவைகள் ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

 இவ்வாறு கலெக்டர் கூறினார்..

  அப்போது எஸ்.பி., ஜெயக்குமார், திருச்செந்துார் ஏஎஸ்பி., ஹர்ஷ்சிங், மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவஅலுவலர் அனிபிரிமின், உடன்குடி வட்டாரவளர்ச்சி அலுவலர் ராணி, குலசேகரன்பட்டணம் பஞ்., தலைவி சொர்ணப்பிரியா ராமலிங்கம்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்