பக்தர்களின் ஆரவாரமின்றி குலசேகரன்பட்டணம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 19:58

உடன்குடி, அக்.17

பக்தர்களின் ஓம் காளி ஜெய் காளி கோஷமின்றி குலசேகரபட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் அக். 26ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தடுப்பதற்கு குலசேகரப்பட்டணம் ஊர் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 2 லட்சம் பங்கேற்பார்கள்.

ஊசி, பாசி விற்போர் வெளியேற்றம்

 இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக தசரா திருவிழா கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி இரவு முதல் கடற்கரையில் இருந்து ஊசி, பாசி விற்பவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கடற்கரை மற்றும் கோயிலுக்கு வரும் அனைத்து ரோடுகளும் அடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

 கொடி பட்டம் ஊர்வலமில்லை. இதனால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. வழக்கம்போல் நேற்று அதிகாலை கஜபூஜை நடந்தது. கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் கோயிலுக்கு வந்த பிறகுதான் கொடியேற்றம் நடைபெறும். இந்த ஆண்டு கோயில் முன் கஜபூஜை மட்டும் நடந்தது. பின்னர் கோயில் பூசாரி ஹரிஷ் பட்டர் கொடி பட்டத்தை கோயிலை சுற்றி கொண்டு வந்தார். காலை 10.45 மணிக்கு கோயில் பூசாரி குமார் பட்டர் கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியேற்றம் நடந்தது. அப்போது உள்ளே இருந்த பட்டர்கள் ஓம் காளி ஜெய் காளி என கோஷம் எழுப்பினர். பின்பு கொடி மரத்திற்கு பால், பன்னீர், பல மணப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், தயிர், விபூதி உட்பட பல்வேறு அபிஷேகங்களும் அதனைத்தொடர்நது சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

  பின்னர் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் துாத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், திருச்செந்துார் ஏஎஸ்பி., ஹர்ஷ்சிங், குலசை., போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா, துாத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) ரெத்தினவேல் பாண்டி, கோயில் ஆய்வாளர் பகவதி ஆகியோர் கலந்துகொண்டனர். மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும். இரவு 8 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வருதல் நடந்தது.


 இன்று பக்தர்களுக்கு அனுமதி

 இன்று 2ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரும் அக். 25ம் தேதி வரை தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

 இன்று 2ம் திருவிழா மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 8 மணிக்கு அன்னை முத்தாரம்மன் விருச்சிக வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து அக். 25ம் தேதி வரை அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருகிறார்.


சூரசம்ஹாரம்

 அக்-26ம் தேதி காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலுக்கு முன் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. அக். 27ம் தேதி 11ம் திருவிழா அன்று அதிகாலை 3 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மன் திருக்கோயிலுக்கு வந்ததும் காப்புகளைதல் நடக்கிறது.

 ஏற்பாடுகளை துாத்துக்குடி மாவட்ட கலெக்டர்,மாவட்ட காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். 1ம் திருவிழா முதல் 11ம் திருவிழா வரை அனைத்து நிகழ்சிகளும் ஆன்லைன் மற்றும் உள்ளுர் டிவிகளில் நேரடியாக ஔிபரப்பு செய்யப்படுகிறது.