காரில் தவற விட்ட செல்போனை டுவிட்டர் தகவலின் பேரில் 3 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீஸ் கமிஷனர்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:52

கால்டாக்சியில் தவற விட்ட செல்போன் குறித்து டுவிட்டரில் பதிவு போட்ட நபருக்கு அவரது செல்போனை சென்னை நகர போலீஸ் கமிஷனரின் உடனடி அதிரடி நடவடிக்கையால் காவல்துறையினர் 3 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்து செயல்பட்டது பாராட்டுக்களை குவித்துள்ளது.

சென்னை, அயனாவரம், குன்னூர் ஐரோட்டைச் சேர்ந்தவர் தேவன் பரத் தோஷி. நேற்று முன்தினம் இரவு சென்னை நகர காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தனது தந்தை கால்டாக்சியில் அவரது மொபைலைத் தவறவிட்டதாகவும், அந்த காரின் பதிவெண் மற்றும் ஓட்டுநரின் செல்போன் நம்பரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கார் டிவைரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும் தவறவிட்ட கைப்பேசியை கண்டுபிடித்து உதவி செய்யுமாறு போஸ்ட் செய்திருந்தார். அந்த ட்டுவீட்டை பார்த்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தேவன் பரத் தோஷிக்கு விரைந்து உதவி செய்யுமாறு சென்னை நகர காவல் சமூக வலைதள காவல்குழுவினருக்கும், போக்குவரத்து காவல் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதனையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாகன எண்ணின் முகவரியை கண்டுபிடித்தனர். அந்த கால் டாக்சியை திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி அந்த காரை கண்டுபிடித்தனர். காரில் தவறவிட்ட செல்போனை 3 மணி நேரத்தில் மீட்டனர். அது உடனடியாக தேவன்பரத் தோஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. டுவிட்டரில் தான் போட்ட பதிவை உடனே பார்த்து பதில் அளித்து தனது தந்தையின் தொலைந்து போன செல்போனை மீட்டுக் கொடுத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை நகர காவல் குழுவினருக்கு தேவன் பரத் தோஷி  நன்றி தெரிவித்தார்.