குழித்துறையில் நடந்த ரோடு மறியல் போராட்டம்.

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:37

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது மாயமான வாலிபரை தேட போதிய முயற்சி எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் குழித்துறையில் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மார்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை காலணி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் ஷாஜிகுமார் (30). பெயின்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை ஷாஜிகுமாரும் அவரது நண்பர்களும் சேந்து குழித்துறை தாமிரபரணி ஆற்று சப்பாத் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்த ஷாஜிகுமாரை ஆற்றுவெள்ளம் அடித்து மறுபுறம் கொண்டு சென்றது. அவரது அலறல் சப்தத்தை கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டனர். அதற்குள் அவர் தண்ணீரில் முழ்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆற்றில் இறங்கி வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இருள் சூழந்ததால் மீட்பு பணி கைவிடப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்று பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை மீட்க படகு போன்றவற்றை பயன்படுத்தி தேடுதல் பணியில் ஈடுபடவில்லை என கூறி வக்கீல் சாலின், மருதங்கோடு பஞ்., தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் குழித்துறை போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அதிகாரியிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் மூலம் பேசினர். தண்ணீர் அதிகம் பாய்வதால் மீட்பு பணி மேற்கொள்ள சிரமமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பைபர் படகுகளை பயன்படுத்தி கூடுதல் மீட்பு படை வீரர்களை பயன்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதைதொடர்ந்து குளச்சல் பகுதியில் இருந்து பைபர் படகுகள் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்படும் என விளவங்கோடு தாசில்தார் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் பைபர் படகுகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு மீட்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மீட்பு பணியை பார்வையிட ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.