சென்னையில் போலி மருத்துவர் கைது: திடுக்கிடும் தகவல்கள்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:25

போலி ஆவணங்களுடன் மருத்துவக்கவுன்சிலில் பெயரைப்பதிவு செய்ய வந்த போலி மருத்துவரை சென்னை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பிரபல மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ரூ. 25 லட்சம் பெற்றுக் கொண்டு மருத்துவம் தொடர்பான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, விஸ்வநாதபுரியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 41). இவர் கரூரில் ஜெயா கிளினிக் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். தன்னை ஒரு எம்பிபிஎஸ் படித்த டாக்டர் என சொல்லிக்கொண்டு மக்களுக்கு மருத்துவம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மெடிக்கல்கவுன்சிலில் ஜெயபாண்டி பதிவு செய்வதற்காக வந்துள்ளார். அவர் சமர்ப்பித்த சான்றிதழ்களை மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. அது தொடர்பாக மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜெயபாண்டி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாாக்கல் செய்தார். அதில், ‘‘தான் ஒரு எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்றும் தன் மீது மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்’’ என்றும் அதில் புகார் அளித்திருந்தார்

இந்நிலையில் கடந்த 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவரது சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்பதும் மருத்துவம் படிக்கவில்லை என்பதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து ஜெயபாண்டியனை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் தனது வக்கீலை சந்திப்பதற்காக ஜெயபாண்டியன் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்திருந்தார். கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர் தங்கியிருப்பதை அறிந்த அரும்பாக்கம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது போலி அரசு ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்கள் மூலம் மோசடியில் ஈடுபடுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வரும் டாக்டர்கள் பற்றி  திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:

‘‘ஜெயபாண்டியன்  எம்எஸ்சி சைக்காலஜி மற்றும் பார்மசிஸ்ட்டுக்கான டிபார்ம்  படிப்பு மட்டுமே படித்துள்ளார். தன்னை மருத்துவராக பதிவு செய்வதற்காக போலியான எம்பிபிஎஸ் சான்றிதழ், அரசு முத்திரை, மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகளின் கையொப்பம் போன்றவற்றை தயாரித்து சான்றிதழ் தயாரித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு போலி மருத்துவர்களுக்கான போலி சான்றிதழ்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்ற அதிர்ச்சித்தகவலை ஜெயபாண்டியன் வெளியிட்டுள்ளார். மேலும் திருச்சியில் உள்ள பிரபல மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவருடன் இணைந்து ஜெயபாண்டியன் போலியாக மருத்துவ சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயபாண்டியன் மட்டுமின்றி அவரது பேட்ச்சைச் சேர்ந்த 16 நபர்களிடம் ரூ. -20 முதல் 25 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு போலி மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர்கள் மூன்று பேரும் இணைந்து ஒரு வருடத்தில் மட்டும் 15 நபர்களுக்கு மேல் போலி மருத்துவ சான்றிதழ்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர். மேலும் திருச்சியைச் சேர்ந்த மூன்று மருத்துவப்பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். குறைந்தபட்சம் இவர்கள் 100க்கும் அதிகமான நபர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ் அளித்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்’’.