நெல்லையில் காவலர்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளும் பயிற்சி

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:23

காவலர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வண்ணம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் தற்காப்பு  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நெல்லை ஆயுத படை மைதானத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பார்வையிட்டு தொடங்கி வைத்தார் .

தமிழக காவல்துறையினர் தொடர் பணிகளின் காரணமாக  மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனை  தடுக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து காவல்துறை டிஜிபி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு யோகா உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் நடைபெறும் காவலர்களுக்கான கவாத்து பயிற்சியில் காவல்துறையினரின் மன உறுதியையும் உடல் வலிமையும் அதிகரிக்கும் விதமாக கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் கற்றுத் தர முடிவு செய்யப்பட்டது.

 அதன்படி கடந்த வாரம் காவலர்களுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சனிக்கிழமை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளும் பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பார்வையிட்டார் . இதில் துப்பாக்கிகளை ரகம் வாரியாக கையாளுதல் சுடுல்  ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது.