‘நோ’ என்ட்ரியில் வந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது தள்ளிவிட்டதால் டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு காலில் இரண்டு தையல்

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 19:03

‘நோ’ என்ட்ரியில் வந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது தள்ளிவிட்டதால் டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு காலில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. சிசிடிவி செயலிழந்ததால் வாலிபரை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை, கேபி தாசன் ரோடு, அண்ணா சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர். தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்சாமி அந்த சிக்னலில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இருந்தார். அப்போது செனடாப் ரோட்டில் இருந்து

ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் அண்ணா சாலை நோக்கி செல்ல முயன்றார். அவரை இன்ஸ்பெக்டர் மயில்சாமி  தடுத்து நிறுத்த முயன்றசார். ஆனால் அந்த வாலிபர் இன்ஸ்பெக்டர் மீது மோதி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டார். இதில் இன்ஸ்பெக்டரின் வலதுகாலில் பலத்த அடிபட்டது. அவர் அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவருக்கு காலில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பழுதடைந்ததால் இன்ஸ்பெக்டர் மயில்சாமி மீது மோதிச்சென்ற நபர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.