போலீஸ் அதிகாரிகள் பெயரில் தொடரும் பேஸ்புக் மோசடிகள் உதவிக்கமிஷனர்களை தொடர்ந்து கூடுதல் கமிஷனர் பெயரிலும் மோசடி * களத்தில் இறங்கியுள்ள சைபர்கிரைம் காவல்துறை

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 19:00

சென்னை நகரில், போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசை தொடர்கதையாகி வருவது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவிக்கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பெயரில் தொடங்கிய இந்த மோசடி தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரிலும் தொடங்கியுள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஆன்லைன் மாயாவியை பிடிக்க சென்னை நகர சைபர்கிரைம் பிரிவு தனிப்படை போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

மோசடிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆன்லைன் மூலம் அரங்கேறும் இந்த மோசடிகள் தற்போது சென்னை நகரில் பல ரூபங்களில் விஸ்வரூபம் எடுத்து போலீசாருக்கு சவால் விட்டுள்ளது. சென்னை நகரில் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பெயரில் பேஸ்புக் தொடங்கி இந்த நுாதன மோசடியை தில்லாலங்குடி இந்த ஆன்லைன் மாயாவிகள் புதிய பாணியில் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் சென்னை மாதவரம் உதவிக்கமிஷனர் அருள் சந்தோஷமுத்து பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர்கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது முதல்தான் இந்த மோசடி குறித்தே போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளது. அருள் சந்தோஷமுத்து புகைப்படங்கள் அடங்கிய அந்த பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது நண்பர்களுக்கு சென்ற குறுஞ்செய்தி. தான் பணமன்றி கஷ்டப்படுவதாகவும், பண உதவி செய்யுங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருந்தது. அது தொடர்பாக அவரது நண்பர்கள் அருள் சந்தோஷமுத்துவிடம் போன் செய்து கேட்ட போதுதான் அவருக்கே  தகவல் தெரியுமாம். அந்த பேஸ்புக்கை அவர் ஆய்வு செய்த போது அது போலியானது. தான் அந்த பக்கத்தை தொடங்கவில்லை என தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் மாதவரம் சைபர்கிரைம் பிரிவில் அவர் புகார் அளித்தார்.


அதே சென்னை தண்டையார்பேட்டை உதவிக்கமிஷனர் ஜூலியஸ் சீசரின் பெயரிலும்  இந்த பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவரை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ‘‘உங்களுக்கு என்ன ஆனது, உடல் நிலை சரியில்லையா, வறுமையில் வாடுவதாகவும், பண உதவி தேவை எனவும் கேட்டுள்ளீர்களே’’ என அவரிடம் துக்கம் விசாரித்துள்ளனர்.


இதைக் கேட்டு குழப்பம் அடைந்த ஜூலியஸ் சீசர் தான் நன்றாக உள்ளதாகவும் தனக்கு எந்த குறையும் இல்லை எனவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள்,உங்கள் முகநூல் பக்கத்தில், நீங்கள்தான் பண உதவி செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள் என தெரிவித்தனர். அவருக்கு துாக்கிவாரிப்போட்டது.


பின்னர், தனது பெயரில் யாரோ மர்ம நபர்கள் போலிகணக்கு தொடங்கி இதுபோல் பணம் பறிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கொண்டார். பின்னர் அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்த பின்னர் அந்த பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து சென்னை நகர தெற்கு கூடுதல் கமிஷனரான ஐபிஎஸ் அதிகாரி தினகரன் பெயரிலும் இதே போல பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது இன்னொறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணமோசடி செய்ய முயன்றிருப்பதாக சென்னை, கீழ்ப்பாக்கம் சைபர் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் கமிஷனர் தினகரனின் சார்பில் அலுவலக எழுத்தராக பணிபுரிந்து வரும்

மார்ட்டின் விக்டர் சாம் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘கூடுதல் கமிஷனர் சட்டம், ஒழுங்கு (தெற்கு) அலுவலகத்தில் முகாம் எழுத்தராக நான் பணிபுரிந்து வருகிறேன். கூடுதல் கமிஷனர் தினகரனின் முகநூல் கணக்கை அடையாளம் தெரியாத நபர் போலியாக தொடங்கி மற்றவர்களுக்கு உதவ பணம் தேவை என்று கூறி பலரிடம் பணம் மோசடி செயன்றுள்ளார். அந்த நபர் யார் என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அந்த புகாரில் கூறியுள்ளார். அந்த புகார் தொடர்பாக கீழ்பாக்கம் சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த வாரம் முதல் போலீஸ் அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் பணம் பறிக்கத் தொடங்கிய இந்த கும்பல் யார், எங்கிருந்து அதனை தொடங்குகின்றனர் என்பதை கண்டுபிடிப்பதில் சைபர்கிரைம் தனிக்குழு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதே போல 50க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் அதிகாரிகளின் படங்களை பயன்படுத்தி, பேஸ்புக் வாயிலாக, பணம் பறிக்கும் முயற்சியில் இந்த மோசடி கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

மர்ம நபர்கள், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதுபோன்ற மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாரின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.