விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 3,440 போதை மாத்திரைகள் பறிமுதல் * சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 18:58

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திவரப்பட்ட 3,440 போதை மாத்திரைகளை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பார்சலில் போதை மாத்திரைகள் கடத்திவரப்படுவதாக விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த பார்சல்களை பரிசோதனை செய்தனர். அதில் ஒரு பார்சலை சந்தேகத்தின் பேரில் பிரித்து சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் ஆட்விஸ் 10 மில்லி கிராம் மாத்திரைகள் 234 அட்டைகள், லோன்செப் 1 மில்லி கிராம் மாத்திரைகள் 50 அட்டைகள் இருப்பது தெரியவந்தது. 

இதற்குள் மெத்தில்பெனிடேட் மாத்திரைகள் 2,340, ஜோல்பிடெம் மாத்திரகைள் 600 மற்றும் குளோனோசிபெம் 500 மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை மனோ ரீதியாக மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகளாகும். இவற்றை போதை நபர்கள் நீண்டநேர போதைக்கும் பயன்படுத்துகின்றனர். அவற்றுக்குரிய ஆவணங்கள் இல்லாததால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பார்சல் அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் சென்னையில் மருந்துகள் மொத்தமாக விற்பனை செய்யும் நபர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நபர் தொடர்பாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.